பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் பணி அரசு பள்ளிகளில் தீவிரம்
பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் பணி அரசு பள்ளிகளில் தீவிரம்
UPDATED : ஏப் 25, 2024 12:00 AM
ADDED : ஏப் 25, 2024 09:52 AM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் கொண்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் இணைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்களில், மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் வேண்டி கம்ப்யூட்டர் மற்றும் புரஜெக்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, பிராட்பேண்ட் சேவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இணையதள வேகத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில், 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் இணையதள சேவை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல, அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கும் பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் இணைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் இணைப்பு, 1,500 ரூபாய் கட்டணத்திற்குள் சேவை பெறும் வகையில் அமைக்கப்படுகிறது.
இதற்கான தொகை, மாதந்தோறும், முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக பள்ளி மேலாண்மை குழு வங்கிக் கணக்கிற்கு விடுவிக்கப்படும்.
இதேபோல, பிராட்பேண்ட் 'பைபர்' இணைப்புக்காக, 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை, செலவிடப்பட்டுள்ளது. இதற்கான தொகை, பள்ளி மானியத்தில் இருந்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் இணைப்பு பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.