UPDATED : அக் 17, 2024 12:00 AM
ADDED : அக் 17, 2024 06:16 PM

சென்னை:
பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாகக் கூறி, வங்கி விபரங்களை பெற்று, மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என, பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, 10 நாட்கள் தொழில் துவங்க பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கு பின், மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என, மோசடி பேர்வழிகள், பெற்றோரின் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்கின்றனர்.
மேலும், பல்வேறு விதமான உதவித் தொகைகள் பெறும் மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு, அவர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை பெறுகின்றனர். பள்ளி மாணவ - மாணவியருக்கு, ஆதார் புதுப்பிப்பு முகாம் நடத்த உள்ளதாகக் கூறி, விபரங்களை சேகரித்து மோசடியில் ஈடுபடுகின்றனர்.
சிலர், உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க, கியூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்து, விபரங்கள் அனுப்பும்படி கூறி, வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை பறித்து விடுகின்றனர். பணத்தை இழந்த பெற்றோர், போலீசில் புகார் அளித்து வருகின்றனர்.
அரசு அதிகாரிகள், பள்ளிக்கல்வி, வங்கி அதிகாரிகள், மொபைல் போன் வழியாக வங்கிக் கணக்கு, ஆதார் விபரங்களை கேட்க மாட்டார்கள். எனவே, பெற்றோரும், மாணவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.