உயர்கல்வி கனவுகளுக்கு விரிந்த சிறகுகள்: பிளஸ் 2 மாணவர்கள் கல்லுாரி களப்பயணம்
உயர்கல்வி கனவுகளுக்கு விரிந்த சிறகுகள்: பிளஸ் 2 மாணவர்கள் கல்லுாரி களப்பயணம்
UPDATED : நவ 12, 2026 02:26 PM
ADDED : நவ 12, 2026 02:27 PM
திருப்பூர்:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல், பொறியியல் கல்லுாரிகளுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். கல்லுாரிகளின் செயல்பாடு, உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து நேரடியாக அறிந்து கொள்ள இப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவ்வகையில், ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி வரவேற்றார். சி.இ.ஓ. புனிதா அந்தோணியம்மாள், பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட அலுவலர் அண்ணாதுரை களப்பயணத்தை துவக்கி வைத்தனர்.
சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தர்மபிரபு ஒருங்கிணைத்தார். முதல் நாளான நேற்று, 1,200 மாணவியர் முதலிபாளையம் நிப்ட்டீ கல்லுாரி, ஜெய்ஸ்ரீராம் கல்லுாரி, காங்கயம் இன்ஸ்டிடியூஷன்ஸ், திருப்பூர் குமரன் கல்லுாரி உள்ளிட்ட கல்லுாரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
உயர்கல்வி கட்டாயம்
இது குறித்து, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் கூறியதாவது:
மாணவர்கள் தங்கள் உயர்கல்வி கனவை நனவாக்கிக் கொள்ள, கலை, அறிவியல், பொறியியல் கல்லுாரிகளில் உள்ள படிப்புகள், சேர்க்கை நடைமுறைகள், மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகை திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே களப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை சுற்றுலாவாக கருதி பொழுதுபோக்கிவிட்டு திரும்பாமல், பயனுள்ள தகவல்களை சேகரித்து, பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, உயர்கல்வியை கட்டாயம் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
