UPDATED : ஆக 22, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள லோயர்பாரளை எஸ்டேட், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 12ம் தேதி மதியம் சத்துணவு சாப்பிட்ட 21 மாணவர்களுக்கு திடீர் வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று ஒரு மணி நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு சென்றனர்.
அதேபோன்று, 14ம் தேதி சத்துணவுடன் முட்டை சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு இரண்டாவது முறையாக வயிற்றுவலி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த நான்கு நாட்களாக பள்ளியில் குழந்தைகள் சத்துணவு சாப்பிட மறுத்து வருகின்றனர். இதனால், சமைத்த உணவு வீணாகி, கீழே கொட்டப்படுகிறது.
மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், மிக குறைந்த சம்பளத்தில் தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் குழந்தைகள், சத்துணவை நம்பியே உள்ளனர். ஆனால், கடந்த வாரம், இரண்டு முறை குழந்தைகளுக்கு வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. குழந்தைகள் குணமடையும் வரையில், பள்ளியில் சத்துணவு சாப்பிட அனுமதிக்க மாட்டோம் என்றனர்.
இதனிடையே சத்துணவு வழங்கப்படுவது குறித்து, வால்பாறை நகராட்சி அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.

