எம்.பி.ஏ., எம்.சி.ஏ., காலியிடங்களை நிரப்ப ஆக., 31 வரை தடை!
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., காலியிடங்களை நிரப்ப ஆக., 31 வரை தடை!
UPDATED : ஆக 22, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இதற்கான ஆணையை தொழில்நுட்ப கல்வித் துறை முதன்மை செயலர், கல்லூரி கல்வி இயக்குனர் ஆகியோர் பிறப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் என, 270 கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக் கான எம்.சி.ஏ., சீட் எட்டாயிரத்து 966, எம்.பி.ஏ., சீட் ஏழாயிரத்து 779 காலியாக இருந்தன.
இக்காலியிடங்களை நிரப்ப, கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டு கட்ட கவுன்சிலிங் நடந்தது. எம்.சி.ஏ.,வில் இன்னும் இரண்டாயிரத்து 536 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை கல்லூரி நிர்வாகம் நிரப்பிக் கொள்ளும். எம்.பி.ஏ.,வில், 935 இடங்கள் காலியாகவுள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப வரும் 24ல் மூன்றாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது.
கவுன்சிலிங்கில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்.சி.ஏ., எம்.பி.ஏ., படிப்பை தேர்வு செய்த மாணவர்கள், தேர்வு செய்த கல்லூரியில் ஆக., 20ம் தேதிக்குள் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என, தொழில்நுட்ப கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்தன.
இதையடுத்து, ஏராளமான மாணவர்கள், முதலாமாண்டு கட்டணத்தை செலுத்தினர். ஆனால், சில மாணவர்களுக்கு வங்கிகளிடம் இருந்து கல்விக்கடன் கிடைக்காததால், கட்டணத்தை இன்னும் செலுத்தவில்லை.
அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் பல கல்லூரிகளில் நிரப்பப்படவில்லை. அந்த காலியிடங்களை, நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்ப, பல கல்லூரிகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, தொழில்நுட்ப கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வி இயக்ககம், கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான காலியிடங்களை வரும் 31ம் தேதி வரை, கல்லூரி நிர்வாகம் நிரப்பக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
தொழில்நுட்ப கல்வித்துறை, அனைத்து சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர்களுக்கும் கடந்த 14ம் தேதி கடிதம் (எண்: 2910) அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள எம்.பி.ஏ., எம்.சி.ஏ., காலியிடங்களை, கல்லூரி நிர்வாகம் ஆக., 31ம் தேதி வரை நிரப்பக் கூடாது என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல், கல்லூரி கல்வி இணை இயக்குனர் நளினி ரவீந்திரன், அனைத்து கல்லூரி செயலர் மற்றும் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள எம்.பி.ஏ., எம்.சி.ஏ., காலியிடங்களை, கல்லூரி நிர்வாகம் வரும் 31ம் தேதி வரை நிரப்பக் கூடாது என கூறியுள்ளார்.

