UPDATED : ஏப் 07, 2013 12:00 AM
ADDED : ஏப் 07, 2013 09:36 AM
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், நிதி நெருக்கடி காரணமாக, ஊழியர்கள் மற்றும் ஊதியம் குறைப்பு குறித்து பேச்சு நடத்த, கடந்த, நவ., 7ம் தேதி, ஆசிரியர்கள், ஊழியர் சங்கங்களுக்கு "நோட்டீஸ்" வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் சங்க, "ஜாக்" கூட்டமைப்பின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, அரசு குழு அமைத்து, பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்தது. அதில், பல்கலையில், பல முறைகேடுகள் நடந்திருப்பதும், இதற்கு, நிர்வாகமே காரணம் எனவும் தெரிய வந்தது.
முறைகேடு குறித்து, பதில் அளிக்கக் கோரி அரசு, கடந்த மாதம், 7ம் தேதி, பல்கலைக் கழகத்திற்கு கடிதம் அனுப்பியது. பல்கலைக் கழகம், கடந்த மாதம், செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தி, அரசுக்கு பதில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், அரசு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிர்வாக சிறப்பு அதிகாரியாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஷிவ்தாஸ் மீனாவை, கடந்த, 4ம் தேதி நியமித்தது. அவர், அன்று மாலையே பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள, நிதி நெருக்கடி மற்றும் முறைகேடுகளுக்கு காரணமாக, துணைவேந்தர் ராமநாதன் இருந்துள்ளார் என, அவரை சஸ்பெண்ட் செய்து, தமிழக கவர்னர் ரோசய்யா நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பல்கலையின் கணக்குகளை ஆய்வு செய்ய, சிறப்பு தணிக்கைக் குழுவை, தமிழக அரசு அமைத்தது. ஆய்வில், பல்கலையின் நிதியை, மருத்துவமனைக்கு பயன்படுத்தியது; பல்கலை ஊழியர்களின் சேமநல நிதி, பென்ஷன் திட்டத் தொகையை வழங்காதது; பல்கலைக் கழகத்துக்கு வர வேண்டிய கடன் தொகையை வசூல் செய்யாதது; விதி மீறி நியமனங்களை செய்தது; ஊழியர்களுக்கு தவறாக ஊதியம் நிர்ணயம் செய்தது போன்ற முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
இம்முறைகேடுகளுக்கு, கணக்குகளை தவறாகக் கையாண்டது, சரியான கட்டுப்பாடு இல்லாததே காரணம். எனவே, முறைகேடுகள் குறித்து, நிலுவையில் உள்ளவிசாரணை முடியும் வரை, அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் ராமநாதன், "சஸ்பெண்ட்" செய்யப்படுகிறார். இவ்வாறு, கவர்னர் ரோசய்யா கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன், அண்ணாமலை பல்கலையின் நிர்வாகியாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஷிவ்தாஸ் மீனாவை, தமிழக அரசு நியமித்தது என்பது குறிப்டத்தக்கது. அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகப் பணிக்கு, இரண்டு டி.ஆர்.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் குருங்குளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முதன்மை நிர்வாக அதிகாரி, தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் கரூர் டி.ஆர்.ஓ., கிருஸ்துராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வரும், 8ம் தேதி, பல்கலையில் பொறுபேற்கின்றனர்.
