UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM
ADDED : ஜூலை 05, 2014 12:39 PM
மதுரை: அழகிரி அறக்கட்டளைக்குச் சொந்தமான, திருமங்கலம் அருகே உள்ள தயா பொறியியல் கல்லுாரிக்கு, தற்காலிக இணைவிப்பு வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து, அண்ணா பல்கலை மேல்முறையீடு செய்த வழக்கை, மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் ஒத்திவைத்தது.
அழகிரி அறக்கட்டளைக்குச் சொந்தமாக, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில், தயா பொறியியல் கல்லுாரி உள்ளது. கல்லுாரி நிர்வாகம்,அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் 2013-14க்கு தற்காலிக இணைவிப்பு வழங்கக்கோரி சென்னை அண்ணா பல்கலை பதிவாளருக்கு விண்ணப்பித்தோம். பதிவாளர் 2013 ஜூலை 15 ல் நிராகரித்தார். இதை ரத்து செய்து இணைவிப்பு வழங்க உத்தரவிட வேண்டும், என ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தது.
தனி நீதிபதி, "பதிவாளர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கல்லுாரி ஏற்கனவே விண்ணப்பித்ததன் அடிப்படையில், 2014-15 கல்வியாண்டிற்கு அண்ணா பல்கலை இணைவிப்பு வழங்க வேண்டும். பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்க, கல்லுாரிக்கு அனுமதி வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அண்ணா பல்கலை பதிவாளர், மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்சில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி கொண்ட பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, “கல்லுாரிக்கு கட்டட உறுதிச் சான்று, மின் சாதனங்கள் பாதுகாப்புச் சான்று, சுகாதாரச் சான்று அவசியம் என அண்ணா பல்கலை விதிகளில் உள்ளது,” என்றார். கல்லுாரி வக்கீல், “கல்லுாரியை செயல்பட அனுமதித்தால்தானே சான்றுகள் வழங்க முடியும். அங்கீகாரம் பெற்ற பொறியாளர் கட்டட உறுதிச்சான்று வழங்கியுள்ளார்,” என்றார்.
நீதிபதிகள்: ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலை கோரும் சான்றுகள் ஒரே மாதிரியானவையா? அல்லது வேறுபட்டவையா? என கேள்வி எழுகிறது. இவ்வழக்கில் ஏற்கனவே ஐகோர்ட் பெஞ்ச் விவாதித்து தீர்ப்பளித்துள்ளது. அதன் நகல் தற்போது எங்கள் முன் இல்லை. அந்த உத்தரவை படித்துப் பார்க்க அவகாசம் தேவை. விசாரணை ஜூலை 7 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.
