UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM
ADDED : ஜூலை 28, 2023 09:56 AM
திண்டுக்கல்:
மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் 2023-24 நிதியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்,சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் (மாணவ, மாணவிகள்) பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9,11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும். 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரையிலும், 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.தேசியத் தேர்வு முகமை நடத்தும் யசஸ்வி நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்விற்கு ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 12 முதல் 16ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு செப்டம்பர் 29ம் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yet.nta.ac.in மற்றும் http://socialjustice.gov.in/schemes/ ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது,எனக்குறிப்பிட்டுள்ளார்.
