UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM
ADDED : ஜூலை 30, 2023 10:00 AM
சென்னை:
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் உருவாக்கிய, பத்து செவ்வியல் நுால்களை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நேற்று டில்லியில் வெளியிட்டு, தமிழின் பெருமைகளை பேசினார்.மத்திய அரசின், தேசிய கல்விக் கொள்கை உருவாக்கத்தின் மூன்றாமாண்டு விளக்க கூட்டம் நேற்று, டில்லியில் உள்ள பரத மண்டபத்தில் துவங்கியது. பிரதமர் மோடி தலைமையில் துவங்கிய இந்த கூட்டம் இன்றும் நடக்கிறது. இதில், நாட்டில் உள்ள பெரிய கல்வி நிறுவனங்கள், பல்கலைகளின் துணை வேந்தர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நேற்றைய மாலை நிகழ்வில், சென்னையில் உள்ள, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் உருவாக்கியுள்ள, பிரஞ்சு மொழியில் குறுந்தொகை, தொல்காப்பியம் குறித்த ஆங்கில ஆய்வு நுால், பழந்தமிழர் அளவைகள், கலைகள், கல்வெட்டு சொற்கள் குறித்த அகராதிகள் மற்றும் செவ்வியல் தமிழின் கிளை மொழிகள்,சங்கத் தமிழில் சைவ சமயக்கூறுகள் ஆகிய நுால்களை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.அப்போது, தமிழின் செம்மொழி தன்மைகள் குறித்தும், தமிழின் மொழி வளம் குறித்தும் புகழ்ந்து பேசினார். இதில், பாரதிய மொழிகள் சம்மேளனத்தின் தலைவர் சாமுகிருஷ்ண சாஸ்திரி, மத்திய கல்லி துறை செயலர் சஞ்சய் மூர்த்தி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
