UPDATED : ஆக 10, 2023 12:00 AM
ADDED : ஆக 10, 2023 10:09 AM
சென்னை:
உதவி பேராசிரியர் பணிக்கான தகுதிக்கு, மத்திய அரசின், நெட் தேர்வு போதும். தமிழக அரசின், செட் தேர்வு தேவையில்லை என பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.நாடு முழுதும் அரசு பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, நெட் என்ற தேசிய தகுதி தேர்வும், செட் என்ற மாநில அரசின் தகுதி தேர்வும் நடத்தப்படுகிறது.நெட் தேர்வு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., சார்பில், ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. ஆனால், செட் தேர்வை தமிழக அரசு முறையாக நடத்தவில்லை. கடைசியாக, 2018ம் ஆண்டில் செட் தேர்வு நடந்தது. அதன் பின், ஐந்து ஆண்டுகளாக தமிழக அரசு, இந்த தேர்வை நடத்தவில்லை. அப்போது, கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை வழியே, இந்த தேர்வு நடந்தது. இந்த ஆண்டு வேறு பல்கலை வழியே, தேர்வை நடத்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால், செட் தேர்வை நடத்துவது எந்த பல்கலை என்பதை, தமிழக அரசு இன்னும் முடிவு செய்யவில்லை.இந்நிலையில், நெட், செட் சங்கத்தின் மாநில பொது செயலர் தங்க முனியாண்டி கூறியதாவது:
நெட் தேர்வு, சரியான விடையை தேர்வு செய்யும் வகையிலான வினாத்தாளால், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை, தமிழிலும் வினாக்கள் இருக்கும் வகையில், நடத்த வேண்டும். மாநில அளவிலான செட் தேர்வில், கடந்த காலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து, அரசுக்கு பல்வேறு புகார் அளித்துள்ளோம். தற்போது செட் தேர்வு நடத்தினால், அதில் தகுதியில்லாத பலரும் அரசியல்வாதிகளின் சிபாரிசுகளுடன், தேர்ச்சி பெற முயற்சிப்பர்.இதனால், தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்காது. தற்போதைய நிலையில், நெட், செட் எழுதி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், வேலைவாய்ப்புக்கு காத்திருக்கின்றனர். பிஎச்.டி., முடித்தவர்களும் அரசு வேலைக்கு காத்திருக்கின்றனர். மேலும், புதிதாக படித்து வரும் பட்டதாரிகளும், மற்றவர்களும் நெட் தேர்வை எழுதி, உதவி பேராசிரியர் பணியில் சேர முடியும். எனவே, தமிழக அரசின் செட் தேர்வை நடத்த வேண்டிய அவசியமில்லை. தேசிய அளவிலான நெட் தேர்வே போதும்.இவ்வாறு அவர் கூறினார்.
