UPDATED : அக் 12, 2023 12:00 AM
ADDED : அக் 12, 2023 11:11 AM
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் வேலம்மாள் நியூஜென் கிட்ஸ் இணைந்து, விஜயதசமி நாளான, வரும் 24ம் தேதி காலை 7:30 மணி முதல் 11:00 மணி வரை, அரிச்சுவடி ஆரம்பம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சியை நடத்த உள்ளன.இந்த நிகழ்ச்சி, சென்னை சூரப்பேட்டில் உள்ள வேலம்மாள் வித்யாஸ்ரம் பள்ளி, மேடவாக்கம் வேலம்மாள் நியூஜென் பள்ளி வளாகம், வடபழனி ஆண்டவர் கோவில், தாம்பரம் சங்கர வித்யாலயா பள்ளி ஆகிய இடங்களில் நடக்க உள்ளது. இதில், 2.5 வயது முதல் 3.5 வயது வரை உள்ள மழலைகளின் விரல் பிடித்து, பிரபல எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் அ - ஆ எழுதிப் பழக்க உள்ளனர்.இதற்கு, 91505 74441 என்ற எண்ணுக்கு ஹாய் எனும் குறுஞ்செய்தி அனுப்பி, முன்பதிவு விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களை 81483 01771, 81299 71772 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்புகொண்டு அறியலாம். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ள பிரபலங்கள் யார் யார் என, வாசகர்கள் தொடர்ந்து விசாரித்தனர். அவர்களுக்கான விடை இதோ...வி.ஐ.டி., பல்கலையின் வேந்தர் ஜி.விஸ்வநாதன், பிரபல விண்வெளி விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை, வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கணேஷ், டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் சுதா சேஷையன், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரகாஷ், டாக்டர்கள் செங்குட்டுவேல், நிர்மலா ஜெய்சங்கர், கணிதவியல் அறிஞர் சடகோபன் ராஜேஷ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.அதேபோல் பிரபல எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன், இந்திரா சவுந்தரராஜன், பிரபு சங்கர், திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோரும் குழந்தைகளின் விரல் பிடித்து எழுத உள்ளனர். மேலும், நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி, நாடக கலைஞர் வரதராஜன், ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் மற்றும் சென்னை விமான நிலைய டி.ஐ.ஜி., ஸ்ரீராம் ஆகியோரும் குழந்தைகளை வாழ்த்தி, அகரம் கற்பிக்க உள்ளனர்.
