காப்பீட்டு தொழில் வாய்ப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு
காப்பீட்டு தொழில் வாய்ப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு
UPDATED : டிச 16, 2025 09:17 AM
ADDED : டிச 16, 2025 09:18 AM
பொள்ளாச்சி:
ஆயுள், பொது மற்றும் சுகாதார காப்பீட்டுப் பிரிவுகளின் செயல்பாடு, சமீபத்திய போக்குகள் குறித்து, என்.ஜி.எம்., கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொள்ளாச்சி, என்.ஜி.எம்., கல்லுாரியில், வணிகவியல், வங்கியியல் மற்றும் காப்பீட்டுதுறை சார்பில் 'காப்பீட்டுத் துறையில் காப்பீட்டு பங்கு மற்றும் தொழில் வாய்ப்புகள்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முன்னதாக, துறைத் தலைவர் ஜீவா வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) மாணிக்கச்செழியன், இந்தியப் பொருளாதாரத்தில் காப்பீட்டுத் துறையின் முக்கியத்துவம், சமகாலத் தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்ய தகுதியான திறன் பட்டதாரிகள் குறித்து பேசினார்.
கோவை காப்பீட்டு நிறுவன கவுரவச் செயலாளர் பிரசாத், காப்பீட்டுத் துறையின் பரிணாமம், நிதிப் பாதுகாப்பில் அதன் முக்கிய பங்கு, இளம் பட்டதாரிகளுக்கான வாய்ப்புகள், வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கு தொழில்முறை தகுதிகள் குறித்து பேசினார்.
இதேபோல, கோவை காப்பீட்டு நிறுவன இணைச் செயலாளர் பிரவீன்குமார், கவுன்சில் உறுப்பினர் வெற்றிவேல் ஆகியோர் ஆயுள், பொது மற்றும் சுகாதார காப்பீட்டுப் பிரிவுகளின் செயல்பாடு, இடர் மேலாண்மையில் சமீபத்திய போக்குகள், டிஜிட்டல் மாற்றம் மற்றும் காப்பீட்டு ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட தலைப்புகளில் பேசினர்.
கோவை இன்சூரன்ஸ் நிறுவன நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், ஜெகதீஷ்சந்திரன், ஆராய்ச்சித்துறை இயக்குனர் சரவணபாபு, டீன் உமாபதி, மாணவர் விவகாரத்துறை டீன் முத்துக் குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

