UPDATED : செப் 23, 2026 06:04 PM
ADDED : செப் 23, 2026 06:06 PM
புதுச்சேரி:
புதுச்சேரி ஹெரிட்டேஜ் ரவுண்டு டேபிள் மற்றும் லேடீஸ் சர்க்கிள் சார்பில் பாத்திமா அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை பெங்களூருக்கு விமானத்தில் அழைத்து செல்கின்றனர். இதற்கான போஸ்டரை ரவுண்ட் டேபிள் நிர்வாகிகள் வெளியிட்டனர்.
புதுச்சேரி ஹெரிட்டேஜ் ரவுண்ட் டேபிள்-167 மற்றும் புதுச்சேரி ஹெரிடேஜ் லேடீஸ் சர்க்கிள்-187 அமைப்புகள் இணைந்து, மாணவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில், பிளைட் ஆப் பேண்டசி என்ற சிறப்பு பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி கடற்கரை சாலை தீயணைப்புத்துறை அலுவலகம் எதிரே உள்ள தனியார் ஹோட்டலில் மாணவர்கள் விமான பயணத்திற்கான ஏற்பாடு நேற்று மாலை நடந்தது. இதற்கான போஸ்டரை ரவுண்ட் டேபிள் நிர்வாகிகள் வெளியிட்டனர்.
இதில், முன்னாள் தலைவர் மோதிகுமார், செயலாளர் ஜெயந்த், பொருளாளர் விகேஷ், துணை தலைவர் பாலாஜி, பிளைட் ஆப் பேண்டசி அமைப்பாளர் வெங்கடரமணி, சூர்யா, பாலா விஸ்வேஷ், ஹெரிடேஜ் லேடீஸ்-187 தலைவி புவனா பொருளாளர் திரிதி, செயலாளர் சந்திரகலா நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து ஹெரிடேஜ் ரவுண்ட் டேபிள் - 167 தலைவர் ராமராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,இந்த பயணத்தில் அரசு உதவிப்பெறும் பாத்திமா மேல்நிலைப்பள்ளியில் பயின்று சாதனை படைத்த 12 மாணவர்களும் இவர்களுடன் 2 ஆசிரியர்கள் பயணிக்கின்றனர். இந்த பயணம் சென்னையிலிருந்து புறப்பட்டு, பெங்களூரு வழியாக புதுச்சேரியை அடையும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், ஒவ்வொரு குழந்தையும் சாத்தியக்கூறுகள் நிறைந்த உலகிற்கு தகுதியானவர்கள் என்ற கொள்கையின் அடிப்படையில் மாணவர்களுக்கு புதிய பார்வைகள், நீடித்த நட்புகள், தன்னம்பிக்கை மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
