சமூகநீதி விடுதி மாணவ, மாணவியருக்கு 5 நாள் முட்டை, 1 நாள் மட்டன் வழங்க உத்தரவு
சமூகநீதி விடுதி மாணவ, மாணவியருக்கு 5 நாள் முட்டை, 1 நாள் மட்டன் வழங்க உத்தரவு
UPDATED : ஜூன் 22, 2026 10:54 AM
ADDED : ஜூன் 22, 2026 10:57 AM

சென்னை:
சமூக நீதி விடுதிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கை மற்றும் உணவு நடைமுறையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் கறாரான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.
தமிழகம் முழுதும், பல்வேறு சமூகத்தை சேர்ந்த ஏழை மாணவ, மாணவியர் பயனடையும் வகையில், 2,739 சமூகநீதி விடுதிகள், பல்வேறு துறைகள் வாயிலாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், 1.79 லட்சம் மாணவ மாணவியர் தங்கி, நான்காம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்து வருகின்றனர்.
பெற்றோரின் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ள மாணவ மாணவியரை, இந்த விடுதிகளில் சேர்க்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
முந்தைய ஆட்சிகளில், எம்.பி.,க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பரிந்துரை அடிப்படையில், மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டனர். இதனால், தகுதியுள்ள பலருக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இங்கு படிக்கும் மாணவ, மாணவியரின் உணவிற்காக, அரசு மாதந்தோறும் தலா 1,000 முதல் 1,100 ரூபாய் வரை செலவிடுகிறது. காலை, பகல், மாலை, இரவு என, நான்குமுறை உணவு வழங்கப்படுகிறது. இதற்கென மெனு வகைகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. ஆனாலும், அவை பின்பற்றப்படுவதில்லை.
இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், சமூகநீதி மாணவ, மாணவியர் விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, “சமூகநீதி விடுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, மாணவ, மாணவியர் சேர்க்கை விஷயத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
விடுதிகளில் வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டை, ஒரு நாள் மட்டன், ஒரு நாள் சிக்கன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். உரிய எடையில் மட்டன், சிக்கன் வாங்கி வந்து, சமைத்து பரிமாற வேண்டும்” என, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
