சத்துணவு மையங்களில் முட்டை சாப்பிடாதவர்கள் 5 பேர் மட்டுமே
சத்துணவு மையங்களில் முட்டை சாப்பிடாதவர்கள் 5 பேர் மட்டுமே
UPDATED : ஆக 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
திருப்பூர்: திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 12,460 மாணவ, மாணவியரில் ஐந்து பேர் மட்டுமே வாழைப்பழம் வழங்க கண்டறியப்பட்டுள்ளனர்.
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும், நல்லூர் மற்றும் 15 வேலம்பாளையம் நகராட்சி பகுதிகளிலும் உள்ள பள்ளிகள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் இருந்து வருகின்றன. இப்பள்ளிகளில் 130 சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றன. இம்மையங்கள் மூலமாக, 12 ஆயிரத்து 460 மாணவ, மாணவியர் சத்துணவு திட்டத்தால் பயன்பெறுகின்றனர்.
சத்துணவு திட்டத்தில் திங்கள், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் முட்டை வழங்கப்படுகிறது. முட்டை சாப்பிடாத சைவ மாணவ, மாணவியருக்கு வாழைப்பழம் வழங்கும் திட்டத்தை, கடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவின் போது, தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
இதைதொடர்ந்து, அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியரை கணக்கெடுத்து, அதில், முட்டை சாப்பிடாத சைவ மாணவ, மாணவியரை கண்டறியும் பணி துவங்கியது.
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சைவ மாணவ, மாணவியர் கணக்கெடுப்பில், சொக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் இரண்டு மாணவர்கள், மூன்று மாணவியர் மட்டும் முட்டை சாப்பிடாத சைவ பிரியர்கள் என்பது தெரியவந்துள்ளது.
திருப்பூர் ஒன்றிய பகுதியில் கணக்கெடுப்பு பணியை நிறைவு செய்து, கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு (சத்துணவு) அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அனுமதி வழங்கிய பின், அவர்களுக்கு மட்டும் முட்டைக்கு பதிலாக வாழைப்பழம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

