காளிபாளையம் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தற்காலிக தீர்வு
காளிபாளையம் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தற்காலிக தீர்வு
UPDATED : ஆக 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
திருப்பூர்: காளிபாளையம் ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் பணியாற்றுகிறார்; ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து, மாணவர்கள் பெற்றோருடன் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, தற்காலிகமாக இரண்டு ஆசிரியர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காளிபாளையம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காளிபாளையம், ஆதிதிராவிடர் காலனி, வாரணாசிபாளையம், தெற்கு சீராணம்பாளையம் பகுதிகளில் இருந்து வரும் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளியில் ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றினர். தற்போது, இரண்டு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு ஆசிரியர் இடமாறுதல் பெற்று சென்றுவிட்டார். மேலும் ஒருவர், மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இதனால், எட்டு வகுப்புகள் கொண்ட இப்பள்ளியில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே தற்போது பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக, மாணவ, மாணவியரின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறையால், மாணவ, மாணவியரின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையை தீர்க்க மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். அவர்களுடன் மாணவ, மாணவியர் இணைந்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு கல்வி அதிகாரிகள் சென்று, பெற்றோர்களுடன் பேசி, போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ‘ஆசிரியர் நியமித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம்’ என பெற்றோர் தெரிவித்தனர். ‘விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்’ என கல்வி அதிகாரி உறுதியளித்ததை தொடர்ந்து, பெற்றோர் கலைந்து சென்றனர்.
இப்பிரச்னை தொடர்பாக, ஊராட்சி தலைவர் சிவசாமி, துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வார்டு உறுப்பினர் சுந்தரேசன் ஆகியோரிடம் கல்வி அதிகாரிகள் பேசுகையில், ‘பள்ளிக்கு கூடுதலாக இரண்டு ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க ஏற்பாடு செய்கிறோம்’ என உறுதியளித்தனர்.
புதிய ஆசிரியர்களை நியமிக்கும் வரை, இவ்விரண்டு ஆசிரியர்களும் தொடர்ந்து காளிபாளையம் நடுநிலைப்பள்ளியில் பணியாற்ற ஏற்பாடு ய்யப்படும் என தெரிவித்தனர்.

