UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM
ADDED : ஜூலை 05, 2014 11:46 AM
திண்டிவனம்: மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் சத்துணவு பணியாளர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் சத்துணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தின் 56 ஊராட்சிகளில் 122 அரசு பள்ளிகளில் சத்துணவு வழங்கும் மையம் உள்ளது. இந்த மையங்களில் 5 ஆண்டுகளாக பொறுப்பாளர்கள் மற்றும் சமையலர்கள் உள்பட 160 பணியிடங்கள் காலியாக இருந்தது. இதில் பாதியிடங்களை அரசு கடந்தாண்டிற்கு முன் நிரப்பியது.
மற்ற இடங்கள் நிரப்பவில்லை. கடந்த ஆண்டிலிருந்து 25க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்று சென்றுள்ளனர். தற்போது இந்த இடங்களும் காலியாக உள்ளன. மரக்காணம் ஒன்றியத்தில் பொறுப்பாளர்கள், சமையலர் உள்பட 123 இடங்களில் சத்துணவு ஊழியர் கள் இல்லை. ராவணாபுரம், பிரம்மதேசம், கந்தாடு, செய்யாங்குப்பம் உள்பட 15க்கும் மேற்பட்ட மையங்களில் சமையலர்கள் இல்லை.
சில இடங்களில் ஒரு சமையலர் மட்டுமே உள்ளார். இதனால் இங்குள்ள பொறுப்பாளர்களே சமையல் பணியை மேற்கொள்வதால், குறிப்பிட்ட நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இரண்டு மையங்களுக்கு ஒரு பொறுப்பாளர் பணியாற்றுவதால் சத்துணவின் தரத்தை கண்காணிக்க முடியாமல் போகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
