UPDATED : ஜூன் 30, 2023 12:00 AM
ADDED : ஜூன் 30, 2023 11:40 AM
பேரூர்:
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டி, பேரூரில் நடந்தது.தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இரு ஆண்டுகளாக, போட்டி நடத்தாத நிலையில் இந்தாண்டு மீண்டும் நடத்தப்பட்டது. மாவட்ட அளவிலான இப்போட்டி, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லுாரியில் நேற்று நடந்தது; தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி துவக்கி வைத்தார்.கோவை மாவட்டத்தில் உள்ள, 38 பள்ளிகளை சேர்ந்த, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் - 118 பேர், 20 கல்லுாரிகளை சேர்ந்த, 56 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களுக்கு தனித்தனி பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில், முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு, கலெக்டர் பரிசுகளை வழங்குவார். ஒவ்வொரு பிரிவிலும், முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளுக்கு, தகுதி பெற்றுள்ளனர் என தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
