UPDATED : ஆக 04, 2023 12:00 AM
ADDED : ஆக 04, 2023 10:36 AM
திருப்போரூர்:
திருப்போரூர் வட்டார தோட்டக்கலை துறையில், முக்கிய பணியிடங்கள் நிரப்பப்படாததால், அலுவலக பணிகள் மற்றும் அரசு அறிவிக்கும் திட்டங்கள் விவசாயிகளுக்கு கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.திருப்போரூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், செம்பாக்கம் ஊராட்சி, சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் அமைந்துள்ளது. இதில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது. தோட்டக்கலைத் துறையில், தேசிய தோட்டக்கலை வளர்ச்சித்திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம், மூங்கில் இயக்கம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இங்கு, இரண்டு ஆண்டுகளாக முக்கிய பணியிடங்களான தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர் நிரந்தரமாக நிரப்பப்படவில்லை. மற்ற வட்டாரங்களிலிருந்து, அவ்வப்போது பொறுப்பு பணியில் அலுவலர்கள் வந்து செல்கின்றனர்.இதனால், திருப்போரூர்வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் நலத்திட்டங்கள் பெறவும், விவசாய தொழில்நுட்ப ஆலோசனைகள் பெறவும் முடியாமல் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். மேலும், காலிப்பணியிடங்களால் அலுவலக பணியும் முடங்கியுள்ளது. இதனால், விவசாயம் செய்வது குறைந்து, பல ஆயிரம் ஏக்கர் சாகுபடி நிலங்கள் லே-அவுட்களாக மாறிவரும் நிலை உருவாகிறது. விவசாய தொழிலுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படாமல் உள்ளது என, விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேபோல், தோட்டக்கலைத் துறை சார்ந்து, வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும் சாகுபடிகளை, வருவாய்த் துறை ஊழியர்கள், முறையாக கிராம கணக்கில் கணக்கிடுவதில்லை எனவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
