UPDATED : ஆக 21, 2023 12:00 AM
ADDED : ஆக 21, 2023 04:49 PM
திருவள்ளூர்:
திருவள்ளுர் மாவட்ட இயற்கை விவசாய குழுவினர், இலவசமாக அங்கக சான்றிதழ் பெறலாம்.திருவள்ளூர் மாவட்ட விதை சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் என். ஜீவராணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, இலவசமாக அங்கக சான்றிதழ் வழங்கப்படஉள்ளது. சான்றிதழ் பெற விரும்பும் ஒரே கிராமத்தைச் சேர்ந்த அல்லது அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த, இயற்கை விவசாயிகள் குறைந்தபட்சம் 5 பேர் முதல் அதிகபட்சம் 25 பேர் சேர்ந்து ஒரு குழு அமைக்க வேண்டும்.குழு அமைத்த பிறகு குழு உறுப்பினர்களின் அடிப்படை விவரங்களுடன், பிஜிஎஸ்-இந்தியா விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன், pgsindia-ncof.gov.in என்ற வலை தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின், அதற்கான ஆவணங்களை மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு பெறப்படும் சான்றிதழ் வாயிலாக, இயற்கை விவசாயிகள் தங்களது விளை பொருட்களை மதிப்பு கூட்டு செய்து அதிக விலைக்கு விற்று கூடுதல் லாபம் பெற முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
