UPDATED : நவ 14, 2023 12:00 AM
ADDED : நவ 14, 2023 10:06 AM
உடுமலை:
பள்ளி மாணவர்களுக்கு, இயற்கையை பாதுகாக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த, அமைக்கப்பட்ட பசுமைப்பள்ளி, திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 359 சுற்றுச்சூழல் மன்றங்கள் மற்றும் 250 பசுமைப்படை அமைப்புகளும் உள்ளன. மாணவர்களுக்கு இயற்கை பாதுகாப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த பசுமைப்பள்ளி, திட்டம் முன்பு அறிவிக்கப்பட்டது.திட்டத்தின்படி, ஒவ்வொரு கல்வியாண்டிலும் குறிப்பிட்ட பள்ளிகள் தேர்வு செய்யப்படுகிறது. இவ்வாறு தேர்வு செய்யப்படும் பள்ளிகளுக்கு, வனத்துறையின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.அதில், ஒவ்வொரு மரக்கன்றுக்கும், சுற்றுச்சூழல் மற்றும் பசுமைப் படையைச் சேர்ந்த ஒவ்வொரு மாணவரின் பெயர்களை இட வேண்டும். அந்தந்த பெயர் உள்ள மரங்களை, அந்த மாணவர்கள் மட்டுமே பராமரிக்க வேண்டும். மரக்கன்றுகளை பராமரிக்கவும், ஐந்தாயிரம் ரூபாய் பள்ளி நிர்வாகத்துக்கு வழங்கப்படுகிறது.கல்வியாண்டு இறுதியில், வனத்துறையின் சார்பில், பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படும். திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு, நன்றாக வளர்ந்துள்ள மரங்களைக்கொண்ட பள்ளிகளுக்கு, பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.இத்தொகை, முழுமையாக, மரங்களை வளர்த்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இவ்வாறு திட்டம் செயல்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக, 30 பள்ளிகள் இத்திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டன. அதன் பின், இந்த திட்டம் குறித்து மீண்டும் எந்த அறிவிப்புகளும் இல்லை.மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், சுற்றுசூழலை பாதுகாக்கும் முறையிலும் உள்ள இத்திட்டங்களை ஊக்குவிப்பதில், அரசு அலட்சியமாக இருப்பதால், திட்டத்தின் நோக்கமும் வீணாகிறது.உடுமலை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், இப்போது அரசுப்பள்ளிகளில் சுற்றுச் சூழல் மற்றும் பசுமைப்படை மன்றங்களுக்கு முக்கியத்துவம் குறைந்துள்ளது. இதுபோன்ற திட்டங்கள் வாயிலாக தான் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். புதிய மாற்றங்களுடன் இத்திட்டத்தை மீண்டும் பள்ளிகளில் செயல்படுத்த, அரசு நடவடிக்கை வேண்டும் என்றனர்.
