UPDATED : ஆக 08, 2024 12:00 AM
ADDED : ஆக 08, 2024 05:53 PM

சென்னை:
நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி மக்களவையில் தெரிவித்தார்.
ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ளன. கல்வி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள், தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி) 2020 உடன் இணைக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட எவ்வித காரணங்களாலும் குழந்தைகளின் கல்வி பதிக்கப்படக்கூடாது என்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, 2018-19 ஆம் ஆண்டு முதல் பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த மத்திய நிதியுதவித் திட்டமான அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் வகுப்பறை சூழலுடன் தரமான கல்வி, பன்மொழித் திறன், கற்றல் திறன், பள்ளிகளில் நூலகம், விளையாட்டு, உடற்பயிற்சி, சீருடை, பாடப்புத்தகம், தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் வகுப்புகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தரமான கல்வியை விரிவுபடுத்துவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. சிறப்பு கவனம் தேவைபடும் குழந்தைகளுக்கு தேவையான, உதவிகள், உபகரணங்கள் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவிகளுக்கான உதவித் தொகை போன்றவற்றிற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
உயர்கல்வித் துறை தேசிய உயர்கல்வி திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஜூன் 2023 இல் பிரதமரின் உயர்கல்வி திட்டம் (பி.எம்-உஷா) ரூ.12926.10 கோடி செலவில் தொடங்கியது. இது, கல்வியில் பின்தங்கிய பகுதிகளில் கல்வி சேவையைத் தொடங்கியுள்ளது. இத்திட்டம் மத்திய அரசு நிதியுதவித் திட்டமாகும். ஊரகப் பகுதிகள் உட்பட சம்பந்தப்பட்ட மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தினை உயர்த்துவதே இதன் பிரதான நோக்கமாகும். பிரதமரின் உயர் கல்வித் திட்டத்தின் மீது, கவனம் செலுத்தும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சேர்க்கை விகிதம், பாலின சமத்துவம், மக்கள்தொகை விகிதாச்சாரம் மற்றும் பெண்கள், திருநங்கைகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னேற விரும்பும் எல்லைப் பகுதி, தீவிரவாதத்திற்கு ஆளாகும் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கவனம் செலுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் அடையாளம் காணப்படுகின்றன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.