UPDATED : டிச 06, 2023 12:00 AM
ADDED : டிச 06, 2023 11:16 AM
நாமக்கல்:
தமிழக அரசு சார்பில், 380 ஆசிரியர்களை, கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு, ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.இதுகுறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த, பள்ளிக்கல்வித்துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது. கனவு ஆசிரியர் விருது வழங்குவதற்காக நடப்பாண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது அனைத்துநிலை ஆசிரியர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.நடப்பாண்டில், ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நடந்த தேர்வுகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் அணுகுமுறை நுட்பங்கள், பாடப்பொருள்கள் அறிவு, அவர்களது பாடங்களில் பயன்படுத்தும் கற்பித்தல் உத்திகள் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டன.மூன்று கட்ட தேர்வு முறைகளை தொடர்ந்து, 75 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற, 380 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர்-2023 விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.இதில், 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள், 41 முதுகலை ஆசிரியர் அடங்குவர். இவர்களில், 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற, 55 ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளதாகவும், பிற ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்று, விருது வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு அனைத்து ஆசிரியர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
