UPDATED : ஜூலை 28, 2025 12:00 AM
ADDED : ஜூலை 28, 2025 08:53 AM

சென்னை:
நாடு முழுவதிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 5ஜி சேவைகளை உறுதி செய்யும் நோக்கில், 100 பயன்பாட்டு அடிப்படையிலான ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர், மாநிலங்களவையில் எழுத்து மூலம் பதில் அளிக்கும்போது தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ஜூன் 30ம் தேதி வரை, நாடு முழுவதிலும் 4.86 லட்சம் 5ஜி அலைக்கற்றை பரிமாற்ற நிலையங்கள் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களால் நிறுவப்பட்டுள்ளன என்றும், அனைத்து மாவட்டங்களிலும் தற்போது 5ஜி சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், இந்த 5ஜி ஆய்வகங்களின் மூலம், திறன் மேம்பாடு, தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் பயன்பாடுகள் தொடர்பாக சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

