மனிதநேய அறக்கட்டளையில் படித்த 93 பேர் யு.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி
மனிதநேய அறக்கட்டளையில் படித்த 93 பேர் யு.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி
UPDATED : நவ 13, 2025 07:07 AM
ADDED : நவ 13, 2025 07:08 AM
சென்னை:
யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படும்' என, மனிதநேய அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
யு.பி.எஸ்.சி., முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்ற, 373 தேர்வர்களுக்கு, மனித நேய அறக்கட்டளை சார்பில், தலா 15,000 ரூபாய், கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. முதன்மைத் தேர்வுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. கடந்த ஆக., மாதம் நடந்த, முதன்மைத் தேர்வு முடிவுகள், வெளியாகி உள்ளன.
விமான டிக்கெட் இதில், மனித நேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லாத கல்வியகத்தில் பதிவு செய்து படித்த, 93 மாணவ, மாணவியர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு இலவசமாக, மாதிரி நேர்முகத் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வுக்கான குறிப்புகள், கையேடுகள், தினசரி வகுப்புகள், நேர்முக தேர்வில் பங்கேற்போர், டில்லி சென்று வருவதற்கான, விமான டிக்கெட், டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் வசதி, உணவு, மாணவர்களுக்கு தரமான காலணிகள், கோட் சூட், மாணவியருக்கு புடவை, சுடிதார், காலணிகள் என, அனைத்து உதவிகளும் கட்டணமின்றி வழங்கப்படும்.
பாஸ்போர்ட் இப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், சமீபத்தில் எடுக்கப்பட்ட, தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் முதன்மை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன், இன்று முதல் சி.ஐ.டி., நகரில் உள்ள, மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லாத பயிற்சி மையத்தில் நேரிலும், www.mntfreeias.com என்ற இணையதளத்தின் வாயிலாகவும் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

