செயல்வழிக் கற்றல் திட்டத்தை வலுப்படுத்த வசந்திதேவி வலியுறுத்தல்!
செயல்வழிக் கற்றல் திட்டத்தை வலுப்படுத்த வசந்திதேவி வலியுறுத்தல்!
UPDATED : செப் 01, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பல குறைபாடுகள் இருக்கின்றன. அதை சரிசெய்து திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி கூறினார்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் துவக்கப் பள்ளிகளில் செயல் வழிக் கற்றல் திட்டம் (ஆக்டிவ் பேஸ்டு லேர்னிங்) அமலில் இருந்து வருகிறது. புதிய வகையிலான இந்த கற்றல் முறை குறித்து ஆசிரியர்களிடம் இருந்தும், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம் இருந்தும் கடுமையாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இதையடுத்து, திட்ட செயல்பாடுகளின் உண்மையான நிலவரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு, முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவியை அரசு கேட்டுக் கொண்டது.
வசந்தி தேவி, கல்வியாளர் ராஜகோபாலன் மற்றும் அமெரிக்க பல்கலையைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோரைக் கொண்ட மூவர் குழு சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் ஆய்வு செய்தது.
இதன் அறிக்கையை சென்னையில் வசந்தி தேவி நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
செயல்வழிக் கற்றல் திட்டம், தமிழகத்திற்குப் புதிது. பல நாடுகளில் இந்த திட்டம் ஏற்கனவே சிறப்பாகச் செசயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தில் எந்த ஒரு குறையும் சொல்ல முடியாது. எனவே, இந்த திட்டத்தை எக் காரணம் கொண்டும் தமிழக அரசு கைவிட்டுவிடக்கூடாது.
ஆனால், பள்ளிகளில் நேரடியாக நாங்கள் சென்று ஆய்வு செய்தபோது பல குறைகளைக் கண்டறிந்தோம். செயல்வழிக் கற்றல் திட்டத்தில் வகுப்பறைச் சூழல் மிகவும் மாறியிருப்பது வரவேற்கத்தக்கது. மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் அமர்ந்து, கற்பித்தல் முறைகளைக் கவனிப்பது சிறப்பானது. ஆசிரியர் என்ற பயம் இல்லாமல் அவர்களுடன் சகஜமாக மாணவர்கள் பழகுகின்றனர்.
திட்டத்தின்படி ஒவ்வொரு மாணவருடைய படிப்பும் ஒவ்வொரு நிலையில் இருக்கிறது. ஒவ்வொரு நிலையையும் அவர்கள் கடக்கும்போது இறுதிக்கட்ட எல்லையைத் தொடுகின்றனர். இந்த முறையில் மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து படிக்கின்ற வாய்ப்பு இல்லாமல் போகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் இருப்பதால் அவர்களைக் கவனிப்பது ஆசிரியர்களுக்குப் பெரும் பணியாக இருக்கிறது.
மாணவர்கள் ஒவ்வொரு படிப்பு நிலையைக் கடக்கும்போது, அதற்கேற்ற திறமையை அவர்கள் பெறுகிறார்களா? என்று ஆசிரியர்களிடம் கேட்டால், தெரியவில்லை என்று கூறுகிறார்கள்.
கற்றலில் பின்தங்கியுள்ள குழந்தைகளை முன்னேற்றுவதற்கு என்ன வழி என்று கேட்டால், மீண்டும் ஆரம்பத்திலிருந்து கற்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கற்றலில் பின்தங்கும் குழந்தைகளுக்கு சரியான மாற்றுத் திட்டம் இல்லை.
செயல்வழிக் கற்றல் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் இருக்க வேண்டும். அதிகமான மாணவர்களை வைத்துக்கொண்டு இந்த திட்டத்தை சிறப்பாகச் செயல் படுத்துவது முடியாத காரியம்.
ஆசிரியர்கள் தங்களுக்குள் உள்ள பிரச்னைகளை வெளியே சொல்வதற்குப் பயப்படுகின்றனர். அவர்களுடைய பிரச்னைகள் உயர் அதிகாரிகளுக்குத் தெரியவில்லை.
உயர் அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே இடைவெளி இருக்கிறது. ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது, அதில் உள்ள நிறை, குறைகளை ஆசிரியர்கள் வெளிப்படையாக அதிகாரிகளிடம் கூறினால் தான் அதற்குத் தகுந்தாற்போல் நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்த திட்டத்தை ஆசிரியர்கள் வரவேற்கின்றனர். ஆனால், செயல் படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். இதையெல்லாம் அரசு களைய வேண்டும். இவ்வாறு வசந்தி தேவி பேசினார்.

