25ல் நாமக்கல்லில் மறியல் போராட்டம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பங்கேற்பு
25ல் நாமக்கல்லில் மறியல் போராட்டம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பங்கேற்பு
UPDATED : பிப் 21, 2025 12:00 AM
ADDED : பிப் 21, 2025 09:19 AM
நாமக்கல்:
பத்து அம்ச கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு வரும், 25ல் நாமக்கல்லில் நடக்கும் மறியல் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்பது என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், ஒருங்கிணைந்த வட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் கதிரேசன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சங்கர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில், நிதி மோசடி திட்டமான புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம், மத்திய அரசின் திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை நிராகரித்து விட்டு, ஆசிரியர், அரசு ஊழியருக்கு, தேர்தல் அறிக்கை உறுதிமொழியின் படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை, 2003 ஏப்., 1 முதல் தொடர வேண்டும்.
மத்திய அரசு பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியத்தை, தமிழகத்தின் இடைநிலை, தொடக்கநிலை ஆசிரியருக்கு, 2006 ஜூன், 1 முதல் வழங்க வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியருக்கு, மாநில பணிமூப்பு முறையை திணிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தின் ஆசிரியர்,- அரசு ஊழியர்களின் வாழ்வாதாரமான, 10 அம்சக் கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வரும், 25ல் நாமக்கல்லில் நடக்கும் மறியல் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

