20க்கும் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் படிக்கும் 126 அரசு பள்ளிகள்
20க்கும் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் படிக்கும் 126 அரசு பள்ளிகள்
UPDATED : ஜூன் 20, 2025 12:00 AM
ADDED : ஜூன் 20, 2025 11:02 AM

மதுரை:
மதுரை மாவட்டத்தில் அரசு, கள்ளர், ஆதிதிராவிடர், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்கப்பள்ளிகள் மொத்தம் 325, உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள் 131, தனியார் பள்ளிகள் 56 என மொத்தம் 512 தொடக்கப்பள்ளிகள் உள்ளன.
இதே போல் அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் என 177 நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை சுமார் 12,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
சமீபமாக மருத்துவம், வேலைவாய்ப்பில் அரசுப்பள்ளியில் படித்திருந்தால் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக 6ம் வகுப்பில் மேல்நிலைப்பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி ,கள்ளர் சீரமைப்பு, ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை பெருமளவில் சரிந்துள்ளது. இப்பள்ளிகளில் கோடை விடுமுறையிலேயே மாணவர் சேர்க்கையை துவக்கினாலும், எதிர்பார்த்த அளவில் மாணவர்களை சேர்க்க முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.
ஒரே ஒரு மாணவர் படிக்கும் பள்ளி
மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்றியம் வாரியாக ஆண்டிபட்டியில் 28, போடி, சின்னமனுார் தலா 16, மயிலாடும்பாறையில் 24, கம்பம் 17, பெரியகுளம் 11, உத்தமபாளையம் 8, தேனியில் 6 என மொத்தம் 126 பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20, அதற்கு குறைவாக உள்ளனர். அதில் 38 பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர். இந்த 126 பள்ளிகளில் 1542 பேர் படிக்கின்றனர். உத்தமபாளையம் வட்டாரம், ராமசாமிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஒரு மாணவர் மட்டுமே படிக்கிறார். அரசு உதவி பெறும் 28 பள்ளிகளிலும் 20,க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர். இந்த பள்ளிகளில் 342 மாணவர்கள் படிக்கின்றனர்.
அனைத்து பள்ளிகளிலும் குறைந்தபட்சம் இரு ஆசிரியர்கள் இருக்க வேண்டும். சில இடங்களில் தலைமை ஆசிரியர் மட்டுமே உள்ளனர். ஆசிரியர்கள் ஓய்வு, பற்றாக்குறையால் சில பள்ளிகளில் உதவி ஆசிரியர் இரு பள்ளிகளை கவனிக்கும் நிலை உள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை குறைவால் பல அரசு, உதவி பெறும் பள்ளிகள் மூடும் அபாயத்தை நோக்கி உள்ளது.