ஆசிரியர்கள் நியமனம் இழுத்தடிப்பால் ரூ.900 கோடி மிச்சம்
ஆசிரியர்கள் நியமனம் இழுத்தடிப்பால் ரூ.900 கோடி மிச்சம்
UPDATED : ஜூன் 20, 2025 12:00 AM
ADDED : ஜூன் 20, 2025 10:58 AM

மதுரை:
கல்வித் துறையில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடப்பதன் மூலம் ஆண்டிற்கு அரசுக்கு ரூ.900 கோடி நிதி மிச்சமாவதால் அவற்றை நிரப்புவதில் அக்கறை காட்டுவதில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக அரசு வெளிப்படையாக அறிவித்தபோதும் அதற்கேற்ப ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டால் அவர்களுக்கான சம்பளம் ரூ.பல கோடிகளில் வழங்க வேண்டியது வரும் என அதிகாரிகள் கருத்து தெரிவித்து முட்டுக்கட்டை போட்டு விடுகின்றனர்.
தற்போது, 4 ஆயிரம் தொடக்க, நடுநிலை தலைமையாசிரியர்கள் இல்லாமல் 2 ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படுகின்றன. இதுபோல் ஆயிரக்கணக்கான இடைநிலை, பட்டதாரி, உயர்நிலை தலைமையாசிரியர்கள் பணியிடங்களும் காலியாக கிடக்கின்றன. இதன் பின்னணியில் உள்ள வழக்குகளை முடிக்க அரசு முனைப்பு காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லாதது, காலியிடங்களை நிரப்பாதது போன்ற காரணத்தால் மாதம் ரூ.75 கோடி என்ற அளவில், ஆண்டுக்கு ரூ.900 கோடி சம்பளம் அரசுக்கு மிச்சமாகலாம் என ஆசிரியர்கள் வாட்ஸ் ஆப் குழுக்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இதை ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் உறுதி செய்கின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
கல்வியாளர்கள், ஆசிரியர்களிடையே முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நற்பெயர் இருந்தது. ஆசிரியர்கள், மருத்துவர்களை அவர் மரியாதையுடன் நடத்தினார். இதனால் தான் அவர் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் மாணவர்கள் முன்னேற்றத்துக்கான செலவாகவும், மருத்துவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் ஆரோக்கியத்திற்கான முதலீடாகவும் பார்க்க வேண்டும். இவற்றை வருவாய் செலவினமாக பார்க்க கூடாது என குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அதிகாரிகள் இதை மறந்துவிடுகின்றனர்.
கல்வித்துறையில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருந்தாலும் அதிகாரிகள் கேட்கும் தகவல்களையும், கல்விசார் செயல்பாடுகளிலும் கூடுதல் சுமையுடன் நிறைவேற்றி வருகின்றனர். இதனால் ஆசிரியர் சம்பளம் மிச்சம். அரசுக்கும் எவ்வித பாதிப்பு இல்லை என்பது போல் தெரியும். ஆனால் மாணவர்கள் சமுதாய நலனுக்கான கல்விசார் வளர்ச்சி எதிர்காலத்தில் பாதிக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. இதுதொடர்பாக கல்வியாளர்களும் எச்சரிக்கின்றனர். இதை அரசு சாதாரணமாக கடந்து விடக்கூடாது. ஆசிரியர் நியமனத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்றனர்.