UPDATED : ஜூன் 20, 2025 12:00 AM
ADDED : ஜூன் 20, 2025 10:51 AM
சென்னை:
சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டியில், தமிழக அளவில் மூன்று பள்ளி மாணவியர் வெற்றி பெற்று பரிசை தட்டிச் சென்றனர்.
அஞ்சல் துறையின், யுனிவர்சல் போஸ்டல் யூனியன் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்களுக்கான சர்வதேச கடிதம் எழுதும் போட்டி, பல்வேறு கருப்பொருள்களுடன் நடத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 9 - 15 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ - மாணவியர் இதில் பங்கேற்பர். இந்தாண்டு நடத்தப்பட்ட போட்டியில், தமிழ்நாடு அஞ்சல் வட்டத்திலிருந்து 8,096 பேர் பங்கேற்றனர். இதில், மூன்று மாணவியர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் முதல் பரிசு பெற்ற விருதுநகர் அரசு உயர்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி அனிஷாவுக்கு, 25,000 ரூபாய்; இரண்டாம் பரிசு பெற்ற கோவை ஆங்கிலோ- இந்தியன் மேல்நிலைப்பள்ளி மாணவி வர்ஷா மேனனுக்கு, 10,000 ரூபாய்; மூன்றாம் பரிசு பெற்ற பண்ருட்டி, ஜான் டீவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வேதாஸ்ரீக்கு, 5,000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டு உள்ளன.
தேசிய அளவில் வெற்றி பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த ஹராதி ரெட்டி, 50,000 ரூபாய் பரிசு பெற்றுள்ளதாக தமிழக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.