166 பள்ளிகளுக்கு கலர் ‘டிவி’ மற்றும் ‘டிவிடி’ வினியோகம்
166 பள்ளிகளுக்கு கலர் ‘டிவி’ மற்றும் ‘டிவிடி’ வினியோகம்
UPDATED : ஆக 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
திருப்பூர்: கற்பித்தல் பயிற்சிக்காக கலர் ‘டிவி’ மற்றும் ‘டிவிடி’ பிளேயர்கள், திருப்பூரில் உள்ள துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.
திருப்பூர் வட்டார வள மையத்துக்கு உட்பட்ட 22 பிளாக்குகளில் 193 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி (ஏ.எல்.எம்.,) மற்றும் செயல்வழிக்கற்றல் (ஏ.பி.எல்.,) முறையில் மாணவ, மாணவியருக்கு பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
இம்முறையில் ‘டிவி’ திரையில் ‘சிடி’கள் மூலமாக எளிதாக புரியும் விதத்தில் பாடங்கள், படக்காட்சிகளாக கற்றுத் தரப்படுகின்றன. எனவே, ஏ.பி.எல்., மற்றும் ஏ.எல்.எம்., கல்வி முறையை கற்றுத்தர பள்ளிகளில் ‘டிவி’ மற்றும் ‘டிவிடி’ ஆகிய வசதிகள் அவசியமாகிறது.
இதைத்தொடர்ந்து திருப்பூர் வட்டார வள மையம் சார்பில், 22 பிளாக்குகளில் உள்ள 166 பள்ளிகளுக்கு 21 ‘இன்ச்’ அளவுள்ள கலர் ‘டிவி’கள் மற்றும் 166 ‘டிவிடி’கள் வழங்கப்பட்டது.
திருப்பூர் எஸ்.எஸ்.ஏ., கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பள்ளி மானியமாக அரசு தரப்பில் ஒரு பள்ளிக்கு ரூ.10,000 வீதம் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஸ்டாண்டுடன் கலர் ‘டிவி’ மற்றும் ‘டிவிடி’க்கு என ரூ.7,296 செலவிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, 166 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன; மற்ற பள்ளிகளுக்கு அடுத்த கட்டமாக வழங்கப்பட இருப்பதாக, எஸ்.எஸ்.ஏ., வட்டார மேற்பார்வையாளர் காந்திமதி கூறினார்.

