UPDATED : அக் 24, 2025 05:06 PM
ADDED : அக் 24, 2025 05:09 PM

சென்னை:
மத்திய அரசு சார்பில் 17வது வேலைவாய்ப்புத் திருவிழா இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் 51,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் இவ்விழா நடைபெற்றது. திருச்சியில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி பங்கேற்று 112 இளைஞர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினார். கோவையில் மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் பங்கேற்று 51 இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக், இளைஞர்கள் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும் என்றும், “வளர்ச்சியடைந்த இந்தியா 2047” கனவை நனவாக்கும் சக்தி இளைஞர்களே என்றும் கூறினார். மேலும், மத்திய அரசு தொடங்கிய 'கர்மயோகி பிராரம்ப்' என்ற இணைய தளத்தின் மூலம் சுயபயிற்சி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
கோவையில் மரக்கன்று நடும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடந்த விழாக்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பணிநியமன ஆணைகள் பெற்றனர்.

