UPDATED : அக் 25, 2025 09:51 AM
ADDED : அக் 25, 2025 09:52 AM
பெங்களூரு:
பெங்களூரில் மது போதையில் பள்ளி வாகனங்களை இயக்கிய 36 ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெங்களூரில் காலை வேளையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பது வழக்கம். இச்சமயத்தில் மாணவர்களை அழைத்துச் செல்லும் பள்ளி வேன், பஸ்களின் ஓட்டுநர்களில் பெரும்பாலானோர் வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச் செல்கின்றனர்.
போக்குவரத்து விதிமீறல்களிலும் ஈடுபடுகின்றனர். ஆபத்தை உணராமல் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, சிலர் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து பெங்களூரு போக்குவரத்து போலீசார் தீவிரமாக கருதினர். நேற்று பெங்களூரு போக்குவரத்து போலீசார் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். நகரின் பல பகுதிகளில் இந்த தணிக்கை நடந்தது. பள்ளி வேன், பஸ்களின் ஓட்டுநர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டனர்.
இதுகுறித்து, நேற்று பெங்களூரு போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை:
நேற்று காலை 7:00 முதல் 9:00 மணி வரை பல பகுதிகளில் சோதனை நடந்தது. இதில், 5,881 பள்ளி வேன், பஸ்களின் ஓட்டுநர்கள் சோதிக்கப்பட்டனர். அப்போது, 36 ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தெரிந்தது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், இவர்களுடைய ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்யக்கோரி சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஓட்டுநர்கள் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில் சிறப்பு சோதனை நடந்தது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

