UPDATED : பிப் 11, 2025 12:00 AM
ADDED : பிப் 11, 2025 10:19 AM

சென்னை:
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 24 மணி நேர தர்ணா போராட்டத்தை, சென்னையில் நேற்று காலை 10:00 மணிக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் துவக்கியது; இன்று காலை 10:00 மணி வரை போராட்டம் நடைபெற உள்ளது.
சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில், வட சென்னை, தென் சென்னை மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடந்த தர்ணா போராட்டத்தில், கோரிக்கையை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டம் குறித்து, சங்கத்தின் மாநில பொருளாளர் டேனியல் ஜெய்சிங் கூறியதாவது:
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத, 21 மாத நிலுவை தொகையை வழங்குதல், தொகுப்பு ஊதிய முறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டத்தை துவக்கி உள்ளோம்.
தி.மு.க., அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி அமைந்துள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் அரசு தான் ஜனநாயக அரசு. வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கும் அரசாக தி.மு.க., உள்ளது.
உடனடியாக பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல, பல்வேறு துறைகளில் உள்ள ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை, வரையறுக்கப்பட்ட ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.
தற்போது தொகுப்பு ஊதிய முறையில் பணியிடங்களை, தனியார் வசம் ஒப்படைப்பது அதிகரித்துள்ளது. இதை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில், 'ஜாக்டோ - ஜியோ' அமைப்புடன் இணைந்து, மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.