முதற்கட்ட எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வில் நிரம்பின... 349 இடங்கள்: அரசு ஒதுக்கீட்டில் 37 இடங்கள் மட்டுமே காலி
முதற்கட்ட எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வில் நிரம்பின... 349 இடங்கள்: அரசு ஒதுக்கீட்டில் 37 இடங்கள் மட்டுமே காலி
UPDATED : ஆக 29, 2025 12:00 AM
ADDED : ஆக 29, 2025 08:41 AM

புதுச்சேரி:
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கான ஏற்பாடுகளை சென்டாக் முடுக்கிவிட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி, மூன்று தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., படிப்பில் 386 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 182 சிறுபான்மையினர் நிர்வாக இடங்கள், 94 என்.ஆர்.ஐ., இடங்கள், 119 இதர நிர்வாக இடங்களுக்கு சென்டாக் முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட்டுகளை ஒதுக்கீடு செய்தது.
இடம் கிடைத்த மாணவர்கள் கல்லுாரிகளில் ஆர்வமாக சேர்ந்தனர். அடுத்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த சென்டாக் தயாராகி வருகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க வரும் 1ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என, சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.
முதற்கட்ட கலந்தாய்வில் சேர்ந்த மாணவர்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ள எம்.பி.பி.எஸ்., சீட்டுகளை கல்லுாரி வாரியாக சென்டாக் வெளியிட்டுள்ளது.
அரசு மருத்துவ கல்லுாரி புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரியில் மொத்தம் 180 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்-131, அகில இந்திய ஒதுக்கீடு-27, என்.ஆர்.ஐ.,-22 சீட்டுகள் என்ற அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. முதற்கட்ட கலந்தாய்வில் இக்கல்லுாரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை 122 மாணவர்கள் கல்லுாரியில் சேர்ந்துள்ளனர். 9 சீட்டுகள் மட்டுமே இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு காலியாக உள்ளன. என்.ஆர்.ஐ., சீட்டுகளை பொருத்தவரை 3 சீட்டுகள் நிரம்பின. 19 சீட்டுகள் காலியாக உள்ளன.
பிம்ஸ் இக்கல்லுாரியில் மொத்தமுள்ள 150 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளில் இந்தாண்டு 70 சீட்டுகள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக பெறப்பட்டன. இதில் 66 சீட்டுகள் முதற்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்டன. 4 சீட்டுகள் காலியாக உள்ளன. மொத்தமுள்ள 62 கிறிஸ்துவ சிறுபான்மை இடங்களில் 5 இடங்கள் நிரம்பின. 57 சீட்டுகள் காலியாக உள்ளன. இதேபால் மொத்தமுள்ள 18 என்.ஆர்.ஐ., சீட்டுகளில் 7 நிரம்பின. 11 சீட்டுகள் காலியாக உள்ளன.
மணக்குள விநாயகர் கல்லுாரியில் மொத்தமுள்ள 250 இடங்களில் இந்தாண்டு 93 சீட்டுகள் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டன. இதில் 83 சீட்டுகள் நிரம்பியுள்ளன. 10 சீட்டுகள் மட்டுமே காலியாக உள்ளன. மொத்தமுள்ள 119 மேலாண்மை இடங்களில் 2 சீட்டுகள் நிரம்பிய நிலையில், 117 சீட்டுகள் காலியாக உள்ளன. என்.ஆர்.ஐ., சீட்டுகளை பொருத்தவரை மொத்தமுள்ள 38 சீட்டுகளில் 8 இடங்கள் நிரம்பியுள்ளன. 30 சீட்டுகள் காலியாக உள்ளன.
வெங்கடேஸ்வரா மொத்தமுள்ள 250 எம்.பி.பி.எஸ்., இடங்களில் இந்தாண்டு 92 சீட்டுகள் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்ட நிலையில், 78 சீட்டுகள் நிரம்பின. 14 இடங்கள் காலியாக உள்ளன. மேலாண்மை சீட்டுகளை பொருத்தவரை மொத்தமுள்ள 120 சீட்டுகளில் 5 சீட்டுகள் நிரம்பின. 115 சீட்டுகள் காலியாக உள்ளன.
37 மட்டுமே காலி அரசு மருத்துவ கல்லுாரியில் -131, மூன்று தனியார் மருத்துவ கல்லுாரிகளில்- 255 சீட்டுகள் என இந்தாண்டு 386 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக பெறப்பட்டன. இதில் முதற்கட்ட கலந்தாய்வில் 349 சீட்டுகள் நிரப்பப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 37 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமே காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.