UPDATED : ஜன 14, 2026 02:15 PM
ADDED : ஜன 14, 2026 02:16 PM
சேலம்: இந்திய தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில், சங்கல்ப் திட்டத்தின் கீழ், சேலத்தில், பெண்களுக்கான 20 நாள் கைவினை எம்ப்ராய்டரி (ஆரி) வேலைக்கான பயிற்சி, நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.
கைவினைத்துறை உதவி இயக்குனர் நீதா, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் திவ்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி பயிற்சியை தொடங்கி வைத்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், 'பெண்களுக்கான அரசின் பல்வேறு திட்டங்கள், அவற்றை பெண் தொழில் முனைவோர் பயன்படுத்தி வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தில் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பது குறித்தும், கைவினை கலைஞர்கள் அடையாள அட்டை பெறும் முறை, மகளிர்குழு மூலம், பெண்கள் தங்களின் தொழிலை எவ்வாறு மேம்படுத்தி கொள்ளலாம் என்பது குறித்தும்' விளக்கம் அளிக்கப்பட்டது.
திட்ட மேலாளர் அத்திராஜ், சங்கல்ப் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். பயிற்சியாளர் டெய்சிராணி ஆரி பயிற்சி அளித்தார். 35 பெண்கள் பயிற்சி பெற்றனர். ஏற்பாடுகளை தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவன பயிற்சி அலுவலர் அசோக் செய்திருந்தார்.

