UPDATED : ஜூன் 22, 2026 06:28 PM
ADDED : ஜூன் 22, 2026 06:30 PM
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நடந்த 'நீட்' மறுதேர்வில் 742 பேர் ஆப்சென்ட் ஆகினர். கடந்த மே மாதம் நடந்த தேர்வில் 3 ஆயிரத்து 218 பேர் பங்கேற்ற நிலையில், நடந்த நீட் மறுதேர்வை 2 ஆயிரத்து 388 பேர் மட்டுமே எழுதியது குறிப்பிடத்தக்கது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அதன்படி மே 3ல் 'நீட்' தேர்வு நடந்தது. ஆனால் வினாத்தாள் கசிந்ததால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு ஜூன் 21ல் நேற்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நீட் மறுதேர்வு எழுத 3,080 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு மாவட்டத்தில் 6 இடங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. எம்.எஸ்.பி.,சோலை நாடார் மேல்நிலைப் பள்ளியில் 944 பேர், அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, கொசவப்பட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி, காந்திக்கிராம பல்கலை ஆகியவற்றில் தலா 480 பேர், திண்டுக்கல் நேருஜி மேல்நிலைப் பள்ளியில் 216 பேர் தேர்வு எழுதினர்.
மறுதேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் அனுமதி கடிதம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அசல் ஆதார் கார்டுடன் மதியம் 1:30 மணிக்கு முன்னதாக தேர்வு மையங்களுக்கு வரவேண்டும், கம்மல், தோடு, வளையல், பர்ஸ், தோல் பை, அலைபேசி, டச்பென், பேனா உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் எதுவும் கொண்டு வரக்கூடாது.'கேட்' மூடிய பிறகு வரும் மாணவர்கள் கண்டிப்பாக உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் உள்பட பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் கடும் கட்டுப்பாடுகள், போலீஸ் பாதுகாப்புடன் 'நீட்' மறுத்தேர்வு மதியம் 2:00 முதல் மாலை 05:00 மணி வரை 6 தேர்வு மையங்களிலும் நடந்தது. மொத்தம் 2 ஆயிரத்து 338 பேர் தேர்வு எழுதினர். 742 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். 'நீட்' மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்வு மையங்களில் உதவி மையம், தடையற்ற மின்சாரம், ஜென்செட், குடிநீர், கழிப்பறை வசதிகள் சிற்றுண்டி கிடைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், பாதுகாப்பு, மருத்துவக்குழு உள்ளிட்டவற்றை மாவட்ட கலெக்டர் துர்கா, எஸ்.பி. ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்னர்.மே மாதம் நடந்த நீட் தேர்வை திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 218 பேர் எழுதியிருந்த நிலையில், 'நீட்' தேர்வு தாள் கசிவு எதிரொலியால் மறுதேர்வை 2 ஆயிரத்து 338 பேர் மட்டுமே எழுதியது குறிப்பிடத்தக்கது.
