UPDATED : மார் 10, 2026 02:16 PM
ADDED : மார் 10, 2026 02:16 PM
சென்னை:
அண்ணாமலை பல்கலையில் பணியாற்றி, தமிழகத்தின் மற்ற கல்லுாரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பேராசிரியர்களில் 85 பேரை, மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கு மாற்றி, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் இயங்கிய அண்ணாமலை பல்கலை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதையடுத்து, தமிழக அரசு அந்த பல்கலையை தன்வசப்படுத்தியது. பல்கலையில் உபரியாக இருந்த பேராசிரியர்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கும், மற்ற பணியாளர்கள், மற்ற துறைகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அண்ணாமலை பல்கலையில் தற்போது ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், அவற்றை நிரப்பிட, இடமாற்றம் செய்யப்பட்ட பேராசிரியர்களை மீண்டும் பல்கலையில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பல்கலை பதிவாளர், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
அதை ஏற்று, 85 பேராசிரியர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கு இடமாற்றம் செய்து, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது, பெரும்பாலானோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

