சாதிக்க துடிக்கும் மாணவர் கூட்டம்: தினமலர் - பட்டம் வினாடி - வினா நிகழ்ச்சி
சாதிக்க துடிக்கும் மாணவர் கூட்டம்: தினமலர் - பட்டம் வினாடி - வினா நிகழ்ச்சி
UPDATED : பிப் 02, 2025 12:00 AM
ADDED : பிப் 02, 2025 10:41 AM

சென்னை:
மாணவர்கள் மீதான அக்கறையில், குறிப்பாக, மாணவர்கள் நிறைய சாதிக்க வேண்டும் என்ற அக்கறையில், ஒரு நாளிதழ் அதிக நிகழ்ச்சிகளை நடத்துகிறது என்றால், அது, தினமலர் நாளிதழாகத் தான் இருக்கும் என சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் பி.ஸ்ரீராம் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களிடம் கணிதம், அறிவியல், வரலாறு, மொழித்திறன், பொது அறிவை ஊக்குவிக்கும் வகையில், தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பாக, பட்டம் இதழ் வெளியாகிறது.
இந்த இதழை படிக்கும் மாணவர்களிடம், கற்றல் சார்ந்த அறிவு தேடலை விரிவுபடுத்தும் வகையில், ஆண்டுதோறும் வினாடி - வினா போட்டி நடத்தப்படுகிறது.
அதன்படி, ஐந்தாம் ஆண்டு வினாடி - வினா போட்டி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, 200 பள்ளிகளில் நடந்தது.
200 அணிகள்
இப்பள்ளிகளில் நடந்த முதல்கட்ட போட்டியில், 50,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்றவர்களில் ஒரு பள்ளிக்கு இருவர் என, 200 அணிகள் தேர்வாகின. இந்த அணிகளுக்கான அரை இறுதி போட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று காலை நடந்தது.
இவர்களுக்கு, 20 கேள்விகள் அடங்கிய எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதற்கு, 20 நிமிடங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. அதிக மதிப்பெண் எடுத்த, முதல் எட்டு அணிகள், இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன.
இறுதி போட்டியில் பங்கேற்க போட்டியாளர்கள் மேடை ஏறியதும், அவர்கள் அனைவருக்கும், தினமலர் நாளிதழ் இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கோப்பை மற்றும் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.
பின், குவிஸ் மாஸ்டர் அரவிந்த், நான்கு சுற்றுகளாக வினாடி - வினா இறுதி போட்டியை நடத்தினார். முதல் பரிசை, கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் ஸ்ரீ வத்சகுமார், அனன்யா வென்றனர்.
இவர்களுக்கு தலா, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஆப்பிள் மேக் புக் மற்றும் பள்ளிக்கான வெற்றி கோப்பையை, தினமலர் இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம், அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மொயின் எஸ்.பி.எம்., ஆகியோர் வழங்கினர்.
இரண்டாம் இடம் பிடித்த, திருத்தணியை சேர்ந்த சுதந்திரா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் சான்வி, ரிஷிதாபிரியா ஆகியோருக்கு தலா, 50,000 ரூபாய் மதிப்புள்ள எச்.பி., லேப்டாப் பரிசாக வழங்கப்பட்டது. அவர்களின் பள்ளிக்கு கோப்பை வழங்கப்பட்டன.
மூன்றாம் இடம் பிடித்த, திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை ஆர்.எம்.கே., மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் லோகேஷ்வரி, சஞ்சனா ஆகியோருக்கு தலா, 20,000 ரூபாய் மதிப்புள்ள, சாம்சங் டேப் மற்றும் பள்ளி கோப்பை வழங்கப்பட்டன.
நான்காவது இடம் பிடித்த சோழிங்கநல்லுாரை சேர்ந்த ஸ்ரீ ஐயப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ரேணுகா, கோனரீகன் பிரகாஷ்;
ஐந்தாம் இடம் பிடித்த படப்பை ஆல்வின் சர்வதேச பொது பள்ளியைச் சேர்ந்த சகஸ்ரா, வெற்றிச்செல்வன் கோபிநாதன்;
ஆறாவது இடம் பிடித்த, ஆதம்பாக்கம் டி.ஏ.வி., பள்ளியைச் சேர்ந்த அதிதி, சாய் ரோஷிணிதா;
சைக்கிள்கள் பரிசு
ஏழாம் இடம் பிடித்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ சங்கர வித்யாலயா பதின்ம மேல்நிலை பள்ளியை சேர்ந்த ஸ்வேதிகா, ஸ்ரீசக்தி; கே.கே.நகரை சேர்ந்த ஸ்பிரிங்பீல்ட் பதின்ம மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த விஷ்ணு, ஜனப்பிரியா ஆகியோருக்கு, 10,000 ரூபாய் மதிப்புள்ள சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம் பேசியதாவது:
தினமலர் - பட்டம் இதழுடன் இணைந்து, இந்த நிகழ்ச்சியை நடத்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். பல ஆண்டுகளாக, 'பட்டம்' மாணவர் பதிப்புடன் தொடர்ந்து பயணிக்கிறோம்.
இந்த முறை, டைட்டில் ஸ்பான்சராக வந்திருக்கிறோம். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பதை பார்ப்பது, ஊக்கம் அளிக்கிறது.
கடந்த ஆண்டும் அதிக மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இன்றைய காலகட்டத்தில், மொபைல் போனில் எதை தேடினாலும் கிடைக்கும்.
அதனால், மாணவர்கள் பொது அறிவை படிப்பதில்லை. ஆனால், இன்று இவ்வளவு மாணவர்கள் பொது அறிவை படிப்பதை, பட்டம் மாணவர் பதிப்பு துாண்டியிருக்கிறது. இதற்கு பட்டம் இதழுக்கு பெரிய நன்றி. இது, உற்சாகத்தை அளிக்கிறது.
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தினமலர் உடன் இணைந்து, மாணவர்களுக்காக நிறைய நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
ஒரு நாளிதழ், மாணவர்களின் அக்கறையில், குறிப்பாக, மாணவர்கள் நிறைய சாதிக்க வேண்டும் என்ற அக்கறையில் அதிக நிகழ்ச்சிகளை நடத்துகிறது என்றால், அது 'தினமலர்' நாளிதழாக தான் இருக்கும். குறிப்பாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு அதிக நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
புதிய சிந்தனைகள்
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிசில், பள்ளி மாணவர்களுக்கு இரு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. ஒரு நிகழ்ச்சி, கேர்ள் டாக் இந்நிகழ்ச்சி, மாணவியரை பேசுவதற்கு ஊக்குவிக்கிறது. யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
அடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் சிந்தனை ஆற்றலை ஊக்குவிக்க, இன்னோவெஸ்ட் நிகழ்ச்சி நடக்கிறது. புதிய சிந்தனைகளை ஊக்குவிக்கிறது. இங்கு, ஒரு கேள்விக்கு யோசித்து, பல விடைகளை மாணவர்கள் கூறினர். அவர்களின் சிந்தனை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
புதிதாக எதையாவது சாதித்து, சமூகத்தில் உள்ள பிரச்னைகளுக்கு விடை காணும் வகையில், துடிப்புடன் அந்த படைப்புகளை வெளிப்படுத்தலாம். இதற்கு பரிசு வழங்கப்படும். ஐடியா, ஒரு பொருளாக உற்பத்தியாக உருவாக்கவும், அதை நிறுவனம் காப்புரிமை பெறவும் உதவப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அக்னிகுல் இணை நிறுவனர் மொயின் எஸ்.பி.எம்., பேசியதாவது:
இந்நிகழ்ச்சியை நடத்திய, தினமலர் நாளிதழுக்கு நன்றி. அற்புதமான வேலையை இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி செய்திருக்கிறார். எங்கள் நிறுவனமான அக்னிகுல், ராக்கெட் உருவாக்கி வருகிறது. கடந்த 2017ல் முதல்முறையாக தனியார் துறையில் ராக்கெட் உருவாக்க வந்தோம்.
என் இணை நிறுவனர் ஸ்ரீநாத், அமெரிக்காவில் இருந்தார். நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். இருவரும் வேலையை விட்டு, இந்தியாவுக்கு வந்து, ராக்கெட் உருவாக்க திட்டமிட்டோம்.
தனியார்மயம்
தற்போது உள்ள ராக்கெட்கள் ரயில் போல் பெரிதாக உள்ளன. மின் சாதனங்கள் சுருங்கி வருவதால், செயற்கைக்கோள்கள் எல்லாம் சிறிதாகி விட்டன. எனவே, தற்போது பெரிய ராக்கெட் தேவைப்படவில்லை. ரயில் மாதிரி ராக்கெட் இருப்பதால், கார் மாதிரி உருவாக்கலாம் என நினைத்தோம்.
நாங்கள் ஆரம்பிக்கும் போது, 2017ல் விண்வெளி துறையில் தனியாருக்கு அனுமதி இல்லை.
நானும், என் இணை நிறுவனரும் தனியார்மயத்துக்கு அனுமதி கேட்டு, அரசுக்கு கடிதம் எழுதினோம். கடந்த 2021ல், இன்ஸ்பேஸ் நிறுவனம் துவக்கப்பட்டது. இதன் வாயிலாக, தனியார் நிறுவனங்கள் முறைப்படுத்தப்பட்டன. இது, இஸ்ரோவின் துணை நிறுவனம்.
இன்று இந்தியாவில் விண்வெளி துறையில், 100 நிறுவனங்கள் உள்ளன. இது, எங்களுக்கு ஒரு சாதனை. தற்போது, 350 குழுவினருடன் பணிபுரிகிறோம்.
இந்த பயணத்தில் உலகில் முதல்முறையாக, 3டி பிரின்ட்டட் தொழில்நுட்பத்தில், ராக்கெட் இன்ஜினை முழுதுமாக உருவாக்கியுள்ளோம். ஒரு ராக்கெட் இன்ஜின் உருவாக்க, ஒன்பது மாதங்களாகும். அதை, நாங்கள் மூன்று நாட்களில் உருவாக்கியுள்ளோம்.
அனைத்து தொழில்நுட்பங்களும் உள்ள வான்வெளி துறை பிடித்திருந்தால், படிக்க வேண்டும். சிறப்பான, அற்புதமான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
நேற்று மட்டுமின்றி, பள்ளிகளில் நடந்த முதல் கட்ட போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயமும், பதக்கமும் வழங்கப்பட்டன.
உதவியும் ஒத்துழைப்பும்
வழங்கிய நிறுவனங்கள் தினமலர் மாணவர் பதிப்பு, பட்டம் 2024 - 25 வினாடி - வினா போட்டியின், டைட்டில் ஸ்பான்சர் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராமுக்கு, தினமலர் நாளிதழ் இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். இறுதி போட்டியில் பங்கேற்ற நான்கு முதல் எட்டு இடங்கள் பிடித்த அணிகளுக்கு சைக்கிள்கள் பரிசு வழங்கிய, ஜஸ்ட் பை சைக்கிள் நிறுவன இயக்குனர் ரித்தேஷ் டி ஷா, மாணவர்களுக்கு எழுதுபொருள் தொகுப்பு வழங்கிய, டாம்ஸ் இண்டஸ்ட்ரீயல் லிமிடெட் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் சங்கர், ஸ்நாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய, நாகா சேவரிட் பிராண்ட் மேனேஜர் பார்கவ் குமார் மற்றும் பயோனீர்ஸ் பேக்கரீஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேனேஜர் சுரேஷ் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கிப்ட் ஸ்பான்சர் ஆக இருந்த சத்யா ஏஜென்சிஸ் மற்றும் புட் பார்ட்னர் ஆன கீதம் வெஜ் ரெஸ்டாரென்ட் மற்றும் பிவெரேஜ் பார்ட்னர் ஆக செயல்பட்ட, டெயிலி ஆகிய நிறுவனங்களுக்கு, நிகழ்ச்சியில் நன்றி தெரிவிக்கப்பட்டது.