இன்றைய இதழியலின் முன்னோடி டி.வி.ஆர்., டி.வி.ஆர்., நினைவுநாள்
இன்றைய இதழியலின் முன்னோடி டி.வி.ஆர்., டி.வி.ஆர்., நினைவுநாள்
UPDATED : ஜூலை 21, 2024 12:00 AM
ADDED : ஜூலை 21, 2024 08:20 AM

இந்திய சுதந்திர போராட்ட காலத்தில், மக்களிடம் சுதந்திர உணர்வை ஊட்ட பல பத்திரிகைகள் உருவாகின. காந்தியும், ராஜாராம் மோகன்ராயும், பாரதியாரும் ஆசிரியர்களாக இருந்து வெளியிட்ட பிரசார பத்திரிகைகள் ஏராளம். சுதந்திரம் பெற்ற பின்பு, மக்களிடம் தகவலை, செய்தியை சொல்லும் விதமாக பத்திரிகைகளின் போக்கு மாறியது.
அரசின் தகவல்களை, அரசியல் செய்திகளை, நாட்டில் நடப்பனவற்றை மட்டுமே பத்திரிகைகள் மக்களுக்கு அதிகமாக எடுத்துச் சென்றன. ஆனால் அதற்கு நேர்மாறாக மக்களின் பிரச்னைகளை, சமூகத்தின் அடிப்படை குறைகளை, வளர்ச்சிக்கான வழிகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், பத்திரிகையின் பார்வையை திசை திருப்பியவர் தினமலர் நாளிதழை நிறுவிய டி.வி.ராமசுப்பையர்.
வளர்ச்சிக்கான கருவி
மேற்கத்திய நாடுகளில் வெறுமனே செய்திகளை மட்டும் தந்து கொண்டிருந்த பத்திரிகைகள், 1970களுக்கு பின், மக்களின் குரலாக அவர்களின் குறைகளை, தேவைகளை எழுதத் துவங்கின. ஆனால் அதை, 1955 - 1960களிலேயே ஆரம்பித்து, சாதித்துக்காட்டியவர் டி.வி.ஆர்.,
பத்திரிகையை மக்களின் வளர்ச்சிக்கான கருவியாக கண்டார். தற்போது நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் எல்லாம் மக்கள் பிரச்னைகள், அடிப்படை தேவைகள் பற்றி எழுதவும், பேசவும் செய்கின்றன. ஆனால் இதற்கு அன்றே அடித்தளமிட்டவர் டி.வி.ஆர்.,
பத்திரிகைகள், செய்தி, ஊடகங்கள் பற்றி படிக்கும் படிப்பு இதழியல் என அறியப்படுகிறது. இதழியலின் நவீன கோட்பாடு வளர்ச்சிக்கான இதழியல்! அதாவது, செய்திகள் வெளியிடுவதன் வாயிலாக மக்களின் சமூக, பொருளாதார, கலாசார வளர்ச்சியில் பங்கேற்று, நாட்டின் வளர்ச்சிக்கு துாண்டுகோலாக இருப்பது தான் வளர்ச்சிக்கான இதழியல்.
இதழியல் என்ற பாடப்பிரிவு இல்லாதபோதே, இன்றைய இதழியல் கோட்பாட்டிற்கு முன்னோடியாக இருந்து பாதை அமைத்திருக்கிறார் டி.வி.ஆர்., என்றால், அவர் பத்திரிகை உலகின் தீர்க்கதரிசியே.
மக்களின் தேவையை செய்தியாக வெளியிட்டு ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதை அடிப்படை பத்திரிகைப் பணியாக கொண்டிருந்தார் அவர். அது நாட்டின் வளர்ச்சிக்கு நாளிதழ் வாயிலாக செய்யும் கடமை என்று நினைத்தார்.
இன்று சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் எல்லாம் ஊடகம் என்று அறியப்படுகின்றன. மீடியா இல்லாத அன்றைய காலத்தில் மக்களுக்கும், அரசுக்குமான தொடர்பு ஊடகமாக தினமலர் நாளிதழை மாற்றிய மீடியேட்டர் டி.வி.ஆர்., இதன்வாயிலாக தமிழ் சமூகம் பெற்றதும், கற்றதும் ஏராளம்.
தலையெழுத்தை மாற்றிய எழுத்து
அவரது எழுத்துப்பணி தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியது. நைல் நதியை விட, தாமிரபரணி தான் முக்கியம் என அவரே குறிப்பிடுவது போல, உள்ளூர் செய்திகளுக்கும் மக்களின் பிரச்னைகளுக்கும் முக்கியத்துவம் தந்து, தலைநகரில் இருந்த ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அன்றைய நாளிதழ்கள் உலகச்செய்தியை உள்ளூருக்கு கொண்டு வந்து கொண்டிருக்க, இவர் உள்ளூர் செய்திகளை உலகுக்கு கொண்டு செல்வதில் உறுதியாக இருந்தார்.
நல்ல வகையில் மக்கள் உயிர் வாழ, செய்திகள் உதவ வேண்டும் என்று நினைத்தவர்.
தகவல்களை தருவது மட்டுமே செய்தி அல்ல. நகரங்களில் நடப்பது மட்டுமே செய்தி ஆகி விடாது. கிராமங்களின் முன்னேற்றமே நாட்டை முன்னேற்றும்; கிராமங்களில் செய்திகளை தேடுங்கள் என்று நிருபர்களுக்கு கட்டளையிட்டார்.
குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம், சாலை, பஸ் வசதி, பள்ளிகள், மருத்துவமனைகள் என கிராமங்களுக்கு அடிப்படை கட்டமைப்புகள் தேவை என எழுதிக்கொண்டே இருந்தார்.
அவரது செய்திகளில் தொலைநோக்கு பார்வை இருக்கும்; பிரச்னைக்கான தீர்வும் இருக்கும். உதாரணமாக, குடிநீர் பஞ்சத்தில் தவித்த கோவில்பட்டி, எட்டயபுரத்திற்கு 35 கி.மீ., துாரத்தில் இருந்து தாமிரபரணி தண்ணீர் கொண்டு வருவது தான் ஒரே வழி என எழுதினார். அரசும் ஏற்றுக்கொண்டது. இன்று வெற்றிகரமாக செயல்படும் குடிநீர் திட்டத்திற்கு காரணமானவர் டி.வி.ஆர்.,
ஒரு பக்க செய்தி
உசிலம்பட்டி முதல் போடி வரை, 1975ல் பெரும் மணல்காற்று வீசியது. விவசாய நிலங்கள், கிணறுகள் மணலால் மூழ்கின. மரங்கள் சாய்ந்தன. விவசாயிகள் பெரும் துயரமடைந்தனர். மணலை அப்புறப்படுத்த தனி ஒரு விவசாயியால் முடியாது. ராட்சத இயந்திரங்கள் வரவேண்டும். அதற்கு அரசின் பார்வைக்கு தகவல் செல்வதே வழி. வெளிஉலகத்திற்கு தெரியாத இந்த தகவலை படங்களுடன் ஒருபக்க செய்தியாக வெளியிட, அதிகாரிகள் சென்னையில் இருந்து இயந்திரங்களுடன் வந்து விவசாயிகளுக்கு உதவினர்.
இதைப் பற்றி டி.வி.ஆர்., நிருபர்களிடம், இவையே அவசியமான செய்திகள். குடிகாரன் குடிபோதையில் யாரையாவது வெட்டி வீழ்த்தினால் அது முக்கிய செய்தி அல்ல; வாழ வேண்டிய, வாழ்விக்க வேண்டிய மனிதன் சாகும் நிலைக்கு போவதை எழுதுங்கள் என்றார்.
டி.வி.ஆர்., சாதித்தது என்ன?
மலைகள், காடுகள் அழிவதால் பருவமழை பெய்யாது; நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும் என்று, இன்றைய புவி வெப்பமயமாதல் நிலையை அன்றே உணர்ந்தவர் டி.வி.ஆர்., இதனால் கண்மாய், ஆறு, குளங்களை காக்க, தொடர்ந்து கட்டுரை வெளியிட்டார்.
நமது குளங்கள் என்று டி.வி.ஆர்., 1963ல் வெளியிட்ட கட்டுரை தொடரை பார்த்து விட்டு, காமராஜர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராமையா, எல்லா குளங்களையும் பார்வையிட்டு நடவடிக்கை எடுத்தார் என்பது அப்போதைய பத்திரிகை உலகின் ஆச்சரிய செய்தி.
துாத்துக்குடி துறைமுகம் அமைந்ததில் டி.வி.ஆர்., பங்கு மிக முக்கியம். துறைமுகம் அமைந்தாலும், தொழிற்சாலைகள் வருமா என்று பிரச்னை கிளம்பிய போது, அங்கு என்னென்ன தொழில்கள் துவங்க வாய்ப்பு உள்ளது என்று பட்டியலிட்டது தினமலர்.
கடந்த, 1967ல் திடீரென துறைமுக உருவாக்கப்பணி நிறுத்தப்பட்டதும் வெகுண்டெழுந்தார் டி.வி.ஆர்., துறைமுகத்தின் அவசியம் குறித்து வர்த்தகர்கள், வல்லுனர்களின் பேட்டிகளை வெளியிட்டார். டில்லியில் பிரதமர் இந்திராவின் கவனத்திற்கு இது சென்றதும், துறைமுக திட்டம் கைவிடப்படாது என அறிவித்தார்.
கடந்த, 1974ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. இதனை தினமும் ஒரு பக்க செய்தியாக வெளியிட்டார் டி.வி.ஆர்., இதன்பிறகே வெளி உலகம் அறிந்தது. டில்லியில் இருந்த மத்திய உணவு அமைச்சர் ஷிண்டே, தினமலர் செய்தியின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் ராமநாதபுரம் வந்து ஆய்வு நடத்தி, டி.வி.ஆர்., முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார்.
அன்றைய தலைவர்கள் சொன்னது
குமரி மாவட்டத்திற்கு குடிநீர், ரயில் போக்குவரத்திற்கு முதலில் அரசின் உதவியை நாடினார் டி.வி.ஆர்., தினமலர் வலுவான செய்தித்தாளாக மாறியதும், அரசியல் தலைவர்கள் டி.வி.ஆரின் தயவை நாடினர். சமூக மாற்றத்திற்கு அரசியல் ஆதரவு, தினமலர் வழியாக டி.வி.ஆருக்கு எளிதாக கிடைத்தது; இது பெரும் சாதனை என்றார், திராவிட மொழியியல் பள்ளியின் நிறுவனர், மறைந்த தமிழறிஞர் வி.ஐ.சுப்பிரமணியம்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்று சொல்கிறோம். ஆனால் திருநெல்வேலி வரை தான் ரயில் பாதை. இதை தென்னிந்திய ரயில்வே என்று சொல்வது எப்படி பொருத்தமாகும்? என்று நெத்தியடியாக எழுதி, திருநெல்வேலி - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் ரயில்பாதை அமைய முழுமுதற் காரணமானார் டி.வி.ஆர்.,
இந்த ரயில்பாதை அமைப்பு முயற்சியிலும், சாதனையிலும், வெற்றியிலும் வேறு யாரும் பங்கு போட முடியாது. அனைத்தும் டி.வி.ஆரின் தினமலர் நாளிதழை சாரும் என்றனர், அன்றைய எம்.பி.,க்கள் சிவன்பிள்ளையும், ரசாக்கும்.
மக்களின் கவலைகளையும், தேவைகளையும் அரசு நிர்வாகத்திடம் எடுத்துச்செல்ல பத்திரிகையால் தான் முடியும் என்ற நிலையை உருவாக்கினார் டி.வி.ஆர்., அதை அப்படியே இன்றளவும் கடைப்பிடிப்பதால், மக்கள் மனதிற்குள் நம்பர் 1 நாளிதழாக தினமலர் வாழ்கிறது.
ஊரினை நாட்டை இந்த உலகினை ஒன்று சேர்க்கப்பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த பத்திரிகைப் பெண்ணே என்று பத்திரிகைகள் குறித்து பாரதிதாசன் பாடியது போல, அந்த பேரறிவாளர் டி.வி.ஆர்., நெஞ்சில் பிறந்த தினமலர், அவர் வழிகாட்டிய மக்கள் சேவையை தொடரட்டும்.
- ஜி.வி.ரமேஷ் குமார், பத்திரிகையாளர்