கல்வி மட்டுமே வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு மாற்றும் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
கல்வி மட்டுமே வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு மாற்றும் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
UPDATED : டிச 06, 2024 12:00 AM
ADDED : டிச 06, 2024 08:53 AM
பந்தலுார்:
கல்வி மட்டுமே வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு, கொண்டு செல்லும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பந்தலுார் அருகே, எருமாடு அரசு மேல்நிலைப் பள்ளியின், 62 வது ஆண்டு விழா நடந்தது.
உதவி தலைமை ஆசிரியர் ஷீஜா வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் ஷோபனா தலைமை வகித்து பேசுகையில், பந்தலுார் சுற்றுவட்டார பகுதி மாணவர்கள், மேல்நிலை கல்வியை இந்த பள்ளியில் தான் கடந்த காலங்களில் படித்துள்ளனர். பழமை வாய்ந்த இந்த பள்ளியில் தற்போது படித்து வரும் மாணவர்கள், கல்வியில் மட்டுமின்றி பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மாநிலம் மற்றும் தேசிய அளவுகளில் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது என்றார்.
நிகழ்ச்சியை துவக்கி வைத்து, கூடலுார் எம்.எல்.ஏ. ஜெயசீலன் பேசுகையில், வாழ்வில் அடிமட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கல்வியை முறையாக கற்றுக்கொண்டால், வாழ்வின் உயர்வான நிலைக்கு செல்ல முடியும். ஆசிரியர்களும் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி, தங்களிடம் படித்த மாணவர்கள் உயர்வான நிலைக்கு சென்றுள்ளனர் என்ற மன நிறைவுடன் இருக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் வாழ்வை உயர்த்தும் ஒரே ஆயுதம் கல்வி என்பது மனதில் கொண்டு படிக்க வேண்டும், என்றார்.
விஞ்ஞானி அசோக்குமார் பேசுகையில், மனித சமுதாயம் தற்போது அனைத்து தேவைகளையும், பெற்று கொண்டு நிறைவாக வாழ்வதற்கு, ஆதி காலத்தில், அறிவியல் வளர்ச்சி வருவதற்கு முன்பே, தங்கள் சுய அறிவு மற்றும் அப்போதைய கல்வியை கொண்டு விடாமுயற்சியுடன் பலர் கண்டுபிடித்துள்ளனர்.
மாணவர்கள், கல்வியை நேசித்து, முழுமையான ஈடுபாட்டுடன், விடா முயற்சியடன் படித்தால் அனைவரும் அறிவில் சிறந்தவர்களாகவும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் நல்ல மனிதர்களாகவும் மாற முடியும், என்றார். பள்ளி ஆசிரியர் ரவிக்குமார் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. ஆசிரியர் ருக்மணி நன்றி கூறினார்.