உணவுப்பொருட்களில் கலப்படம் கண்டறிய கண்காட்சி நடத்தணும்! தன்னார்வலர்கள் எதிர்பார்ப்பு
உணவுப்பொருட்களில் கலப்படம் கண்டறிய கண்காட்சி நடத்தணும்! தன்னார்வலர்கள் எதிர்பார்ப்பு
UPDATED : ஜூலை 06, 2024 12:00 AM
ADDED : ஜூலை 06, 2024 09:24 AM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில், உணவுப்பொருட்களில் கலப்படம் கண்டறிவதற்கான செயல்விளக்க கண்காட்சியை, அவ்வபோது நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், உணவு பாதுகாப்பு துறையால், மக்கள் அன்றாட பயன்படுத்தும் உணவு, தின்பண்டங்களின் தரத்தை அறிந்து கொள்ளவும், உணவு வகைகளில் கலப்படம் செய்து விற்கப்படுவதை கண்டறியவும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஆனால், சமீபகாலமாக, பொள்ளாச்சி நகரில், மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், எவ்வித விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படுவதில்லை. குறிப்பாக, சுற்றுலா மையங்களில், அவ்வப்போது, முகாம் அமைத்து, உணவுப்பொருட்களில் கலப்படம் கண்டறிவதற்கான செயல் விளக்கக் கண்காட்சியை நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுலா பகுதிகளில், பல்வேறு வகையான உணவுப் பொருட்களின் விற்பனை அதிகரிக்கிறது. சில கடைகளில் அதன் தரத்தில் குறைபாடு காணப்படுகிறது.
எனவே, உணவுப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கிலும், கலப்பட உணவுப்பொருட்களை கண்டறியும் வகையில், மக்கள் கூடும் இடங்களில் முகாம் அமைத்து கண்காட்சி நடத்த வேண்டும்.
இதன் வாயிலாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களின் கலப்படத்தை எளிதில் கண்டறிந்து, அவற்றை தவிர்க்க முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.