தேச பணியாற்றுங்கள் ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு அழைப்பு
தேச பணியாற்றுங்கள் ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு அழைப்பு
UPDATED : மார் 30, 2025 12:00 AM
ADDED : மார் 30, 2025 06:25 PM

புதுச்சேரி :
எந்த பாடப்பிரிவு படித்தாலும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சேரலாம் என மத்திய அரசின் ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு பேசினார்.
புதுச்சேரியில் நடந்த தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
படித்தால் பட்டம் கிடைக்கும், வாசித்தால் வாழ்க்கை கிடைக்கும். இந்தியாவில் 4ம் தலைமுறையால் தேஜஸ் என்ற போர் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது, போர் விமான இன்ஜின் தயாரிப்பதில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் போர் விமான இன்ஜின் தயாரிக்கும் 5வது நாடாக இந்தியா இடம்பெறும். இந்த திட்டத்தில் தமிழ் பேசும் விஞ்ஞானியாக நான் உள்ளேன். அப்துல்கலாம் புத்தகத்தை படித்து விஞ்ஞானியாக ஆனேன்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ.,) உள்ள 50 ஆய்வு கூடங்களில் ராணுவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். எந்த பாடப்பிரிவு படித்தாலும் டி.ஆர்.டி.ஓ., துறையில் விஞ்ஞானி ஆகலாம். போர் விமானத்தில் பைலட்களுக்கு ஆக்சிஸின் பற்றாக்குறையை போக்க, காற்றில் இருந்து ஆக்சிஸின் தயாரிக்கும் திட்டத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளோம். இதேபோன்று, மலைப்பிரதேசங்களில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு ஆக்சிஸின் டேங்குகள் தயாரித்து கொடுத்துள்ளோம்.
கொரோனா தொற்றின்போது, இந்திய தொழில்துறை உதவியுடன், 500 ஆக்சிஸின் பிளான்ட்களை உருவாக்கி நாட்டிற்கு கொடுத்துள்ளோம். டி.ஆர்.டி.ஓ.,வில் சேர பி.இ., - பி.டெக்., - எம்.எஸ்சி., படித்தவர்கள் செட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
ஆனால், பொறியியல் படித்தவர்கள் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு தான் செட் தேர்வு எழுத முடியும். எம்.எஸ்சி., படித்தவர்கள் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு தான் 'செட் தேர்வு எழுத முடியும். செட் முடிந்தவுடன் நேர்முக தேர்வு, அதற்கு பின் கவுன்சிலிங் மூலம் நீங்கள் விஞ்ஞானி ஆகலாம்.
அதன்பிறகு மகாராஷ்டிரா மாநிலம், கடகவாசலாவில் உள்ள ராணுவ பல்கலையில் பயிற்சி அளிக்கப்படும். தமிழகத்தில் பாதுகாப்பு தொழில்துறை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 79 நிறுவனங்கள் ரூ.4,200 கோடி முதலீடு செய்துள்ளது. மருத்துவ ஆராய்ச்சி, வேளாண் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகள் உள்ளது. இதேபோன்று, துருவ பகுதிகளையும் ஆராய்ச்சி செய்யலாம். டி.ஆர்.டி.ஓ.,வில் விஞ்ஞானி ஆனால், வரலாற்றில் இடம் பிடிக்கும் அளவிற்கு வாய்ப்பு கிடைக்கும். பெண் விஞ்ஞானிகளும், ராணுவ ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஐ.டி.ஐ., - டிப்ளமோ, பி.எஸ்சி., படித்தவர்களும் இங்கு, துணை தொழில்நுட்ப நிலைகளில் பணியில் சேரலாம். டி.ஆர்.டி.ஓ.,வில் சேர்ந்து தேச பணியில் ஈடுபடலாம். போராட்டம் இல்லாமல் யார் ஆட்டமும் முடிவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.