UPDATED : ஏப் 11, 2024 12:00 AM
ADDED : ஏப் 11, 2024 10:04 AM

புதுச்சேரி:
பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியில் ஆட்டிசம் விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தை ஆட்டிசம் விழிப்புணர்வு மாதமாக உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி புதுச்சேரி தந்தை பெரியார் நகரில் இயங்கி வரும் பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியில் ஆட்டிசம் விழிப்புணர்வு ஓவியப்போட்டிநடந்தது. எம் பள்ளி, என்னை புரிந்துகொண்டு வழி நடத்துங்கள் என்ற தலைப்பில்நடத்தப்பட்ட இப்போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று ஓவியம் தீட்டினர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினரான புதுச்சேரி 'தினமலர்' வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து நடந்த சிறப்பு அமர்வில் பள்ளி தாளாளர் புவனா வாசுதேவன் பேசியதாவது:
ஆட்டிசம் என்பது ஒரு நரம்பியல் சம்பந்தப்பட்ட குறைபாடு. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு முக்கியமாக சமூக தகவல் தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தில் மிகுந்த சிக்கல் இருக்கும்.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு பார்ப்பதில், கேட்பதில், நுகர்வதில், தொடுவது, சுவைப்பதில் விருப்பு, வெறுப்பில் குறைந்த அல்லது அதிகமாக உணர்ச்சிகள் காண்பிக்கக்கூடும்.
கண்களைப் பார்த்து பேசுவதில் தடுமாற்றம், பயம், ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்பர். ஒவ்வொரு ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கும் இது மாறுபடும். இவர்களின் பழக்க வழக்கம், உடல் அசைவுகள், கை மடக்குதல், கை சுழற்றுதல், ஆடுதல் என்று ஏதோ ஒரு வகையான உடல் துாண்டுதல் ஏற்படுத்தும் செயல்களை செய்து கொண்டே இருப்பர்.
உலக மக்கள் தொகையில் 75 ஆயிரம் பேர் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள்தங்களுடைய அன்றாட நடவடிக்கையை நாள் தவறாமல் மற்ற சக மனிதர்களைப் போல சோம்பேறி தனம் இல்லாமல், தங்களின் தினப்படி செயல்களை நேரம் தவறாமல் சரியாக செய்வார்கள் என்பது பெரிய சிறப்பாகும். முக்கியமாக மிகவும் வெகுளியான குணம் உடையவர்கள். பொய் சொல்லத் தெரியாது. மிகவும் பாசம் நிறைந்த குழந்தைகள். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பெற்றோர்கள் ஆட்டிசம் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று தங்கள் குழந்தைகளுடன் உற்சாகமாய் பங்கேற்றனர்.