போலி இணையதளங்கள் உஷார்; கேந்திரிய வித்யாலயா எச்சரிக்கை
போலி இணையதளங்கள் உஷார்; கேந்திரிய வித்யாலயா எச்சரிக்கை
UPDATED : ஏப் 03, 2025 12:00 AM
ADDED : ஏப் 03, 2025 08:43 PM

சென்னை:
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளி இணையதளம் பெயரில், போலி இணையதளங்கள் செயல்படுகின்றன. அவற்றில் வெளியாகும் அறிவிப்புகளை நம்ப வேண்டாம் என, அதன் கல்விப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், நாட்டில் 1,256 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 13.53 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இவை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பிஎஸ்.இ., பாடத்திட்டத்தை கற்பிக்கிறது.
இதில், அதிகளவில் மத்திய அரசு சீருடை பணியாளர்களின் குழந்தைகளும், குறைந்த அளவில் மற்ற குழந்தைகளும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இதனால், இப்பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளி பெயரில், சிலர் போலி இணையதளங்களை துவக்கி உள்ளனர். இது, மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் கல்விப் பிரிவு, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் குறித்த தகவல்கள் அனைத்தும், https://kvsangathan.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே பகிரப்படும். வேறு இணையதளங்களில் வெளியாகும் அறிவிப்புகளை நம்பி, யாரும் ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

