பிலிரூபின் கண்டறியும் சென்சார் மின்னணு கழிவில் கண்டுபிடிப்பு
பிலிரூபின் கண்டறியும் சென்சார் மின்னணு கழிவில் கண்டுபிடிப்பு
UPDATED : ஏப் 15, 2025 12:00 AM
ADDED : ஏப் 15, 2025 11:31 PM
பாலக்காடு:
மனித உடலில் உள்ள பிலிரூபின் அளவைக் கண்டறியும் கருவியை, மின்னணுக் கழிவுகளில் இருந்து பாலக்காடு ஐ.ஐ.டி., ஆராய்ச்சி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
குஜராத் பருல் பல்கலைக்கழக மூத்த விஞ்ஞானியும் உதவிப் பேராசிரியருமான முனைவர் சோயிப் பதான், பாலக்காடு ஐ.ஐ.டி., உயிரியல் அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் ஜெகதீஷ் பைரி, முனைவர் அப்துல் ரஷீத் ஆகியோர் ஒருங்கிணைந்து இந்த கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து, பேராசிரியர் ஜெகதீஷ் பைரி கூறியதாவது:
பயனற்ற மொபைல்போன்களில் உள்ள லித்தியம் பேட்டரிகளிலிருந்து, செம்பு படலத்தைப் பிரித்தெடுத்து பிலிரூபின் (மஞ்சள் காமாலைக்கு மஞ்சள் நிறத்தை ஏற்படுத்தும் பொருள்) கண்டறிதல் சென்சார் கருவியை உருவாக்கியுள்ளோம்.
இதன் நன்மை என்னவென்றால், இந்த சென்சார் பட்டையை குறைந்த செலவில் தயாரிக்க முடியும். மொபைல்போன் பேட்டரிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட செம்பு உலோகத்தை ஒரு கரிம கட்டமைப்பாக மாற்றி, இந்த சோதனை நடத்தினோம்.
இதன் வாயிலாக, கழிவு மறுசுழற்சியை மருத்துவ தொழில்நுட்பத்துடன் இணைக்க முடிந்ததும். இது மின்னணு கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சவால்களை குறைக்கும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.