கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
UPDATED : செப் 29, 2026 03:14 PM
ADDED : செப் 29, 2026 03:15 PM
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தபட்டோர், மிக பிற்படுத்தபட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவிகள் கல்வி உதவி தொகைக்கு பெற விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீடு கீழ், பயிலும் பிற்படுத்தபட்டோர், மிக பிற்படுத்தபட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு இந்தாண்டிற்கான பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவிதொகை திட்டம் பிற்படுத்தபட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படுகிறது.
அரசு, அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு எந்தவித நிபந்தனையின்றி கல்வி உதவிதொகை வழங்கப்படுகிறது.
பாலிடெக்னிக், இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த கல்வியாண்டில் இந்த கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள், https://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பெறப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் தாங்கள் பயிலும் கல்லுாரியில் கல்வி உதவிதொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி, https://umis.tn.gov.in இணையதளம் மூலம் கடந்த வரும் அக்டோபர் 21ம் தேதி வரை கல்வி உதவிதொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
