முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள் காலி: 19 மாவட்டங்களில் கல்வி பணிகள் பாதிப்பு
முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள் காலி: 19 மாவட்டங்களில் கல்வி பணிகள் பாதிப்பு
UPDATED : அக் 16, 2025 03:39 PM
ADDED : அக் 16, 2025 03:40 PM
சென்னை:
தமிழகத்தில், 19 முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், 19 மாவட்டங்களில் கடந்த ஓராண்டாக, பள்ளிக்கல்வி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், பள்ளிக் கல்வித்துறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு முதன்மைக் கல்வி அலுவலர், கல்வி மாவட்டத்திற்கு ஒரு மாவட்டக் கல்வி அலுவலர் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த ஓராண்டாக, 19 மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவர்களின் பணிகளை, மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூடுதல் பணியாக கவனித்து வருகின்றனர்.
அவர்களில் பலர், முதன்மைக் கல்வி அலுவலராக, பதவி உயர்வுக்கு காத்திருக்கின்றனர். ஆனால், நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி, அரசு பதவி உயர்வு வழங்காமல் உள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி., சார்பில் தேர்வு செய்யப்பட்ட, 23 பேருக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்படவில்லை.
மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் என, இரண்டு பதவிகளுக்கான பணிகளை கவனிக்க முடியாமல், தற்போது பொறுப்பில் உள்ள அலுவலர்கள் அவதிப்படுகின்றனர்.
முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு பதவியில் இருப்போர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் குறித்த புகார்களின் மீது, துணிச்சலுடன் எந்த முடிவுகளையும் எடுப்பதில்லை.
இதனால், கல்வி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல், பள்ளிக்கல்வித் துறையின் தலைமை அலுவலகத்தில், எட்டு துணை இயக்குநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், அங்கும் பணிகள் தேக்கம்அடைந்துள்ளன.
இது குறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
நேரடி நியமனம் குறித்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை, சர்ச்சைக்குரிய நான்கு பேரை தவிர, மற்றவர்களை நியமிக்கலாம்.
வழக்கின் தீர்ப்பு எதிராக வந்தால், நான்கு பேருக்கான பதவி உயர்வையோ, பணி இறக்கத்தையோ நடைமுறைப்படுத்தலாம். இந்த முடிவை பள்ளிக்கல்வித் துறை எடுக்காவிட்டால், 19 மாவட்டங்களின் பொதுத்தேர்வு முடிவுகளில் கடுமையான சரிவு ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.