கல்வித் துறையில் ஆம் ஆத்மி சாதனை முதல்வர் ஆதிஷி பெருமிதம்
கல்வித் துறையில் ஆம் ஆத்மி சாதனை முதல்வர் ஆதிஷி பெருமிதம்
UPDATED : டிச 18, 2024 12:00 AM
ADDED : டிச 18, 2024 05:59 PM
புதுடில்லி:
டில்லி அரசுப் பள்ளிகளை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்துவது 10 ஆண்டுகளுக்கு முன், கனவு போல தோன்றியது. ஆனால், கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் ஆம் ஆத்மி ஆட்சியில் அந்தக் கனவு நனவாகியுள்ளது என முதல்வர் ஆதிஷி சிங் கூறினார்.
முகுந்த்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நான்கு மாடி கட்டடத்தை திறந்து வைத்த முதல்வர் ஆதிஷி சிங் பேசியதாவது:
டில்லி அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளை விட கல்வியிலும், உள்கட்டமைப்பிலும் சர்வதேச தரத்துக்கு மாறியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அரசுப் பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு 80 மாணவர்கள் இருந்தனர். இது, கற்றலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வகுப்பறைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதனால், கல்வித் தரம் மேம்பாடு அடைந்துள்ளது. முகுந்த்பூர் பள்ளியின் இந்தப் புதிய கட்டடத்தில் 36 வகுப்பறைகள், மூன்று அதிநவீன ஆய்வகங்கள், தலைமையாசிரியர் அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
சம்தா விஹார் மற்றும் முகுந்த்பூரைச் சேர்ந்த 1,000 மாணவியர் இங்கு படிக்கின்றனர். டில்லியில் ஆம் ஆத்மி அரசு அமைந்த பின், கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளீல் 22,000 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
நான் ஒரு புகழ்பெற்ற தனியார் பள்ளியில்தான் படித்தேன். ஆனால், அங்கேயும் அனைத்து வசதிகளும் நிறைந்த ஆய்வகம் இல்லை. ஆனால் இப்போது அரசுப் பள்ளிகளில் அதிநவீன வசதிகள் கொண்ட ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் மாணவர்கள் ஆய்வக உபகரணங்களைத் தொடக்கூட அனுமதிக்கப்படவில்லை. அதுவே இன்று, உபகரணங்களைப் பயன்படுத்தி கல்வி கற்கின்றனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளும் மாற்றலாம் என்பது கனவாகவே இருந்தது. எங்கள் ஆட்சியில் அது நனவாக்கப்பட்டுள்ளது. கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் ஆம் ஆத்மியை, டில்லி மக்கள் தேர்ந்தெடுத்ததால் இந்தச் சாதனை சாத்தியம் ஆனது.
இவ்வாறு அவர் பேசினார்.
புராரி தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., சஞ்சீவ் ஜா, முகுந்த்பூரில் வசிக்கும் மாணவர்கள் அதிகளவில் மாடல் டவுன் மற்றும் ஆதர்ஷ் நகர் பள்ளிகளில் படிக்கின்றனர். அந்தப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கையை குறைத்து, பணிச்சுமையை குறைக்கும் வகையில் முகுந்த்பூர் பள்ளியில் நான்கு மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்றார்.