பள்ளி திறப்புக்கு முன் துாய்மைப்பணி; பணியாளர்கள் இன்றி தொய்வு
பள்ளி திறப்புக்கு முன் துாய்மைப்பணி; பணியாளர்கள் இன்றி தொய்வு
UPDATED : மே 27, 2024 12:00 AM
ADDED : மே 27, 2024 10:20 AM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமப்புற பள்ளிகளில், பணியாளர்கள் இன்றி துாய்மைப் பணி தொய்வடைந்துள்ளது.
கோடை விடுமுறைக்குப் பின், வரும் ஜூன் மாதம் பள்ளிகள் செயல்பட உள்ளன. இதற்காக, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில், துாய்மைப்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
அவ்வகையில், பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்தல், ஆபத்தான மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல், பள்ளி வளாகத்திற்குள் வளர்ந்து நிற்கும் செடிகளை அப்புறப்படுத்துதல், வகுப்பறையை சுத்தம் செய்தல் என, பல்வேறு பணிகள் மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அந்தந்த உள்ளாட்சி அமைப்பு துாய்மைப்பணியாளர்கள் வாயிலாக, இப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அதேநேரம், பள்ளி மானியம் முழுமையாக கிடைக்கப் பெறாத நிலையில், சில பள்ளிகளில், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, சொந்த செலவில் துாய்மைப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இருப்பினும், கிராமப் புறங்களில் உள்ள அரசு பள்ளிக்கு, துாய்மைப் பணிக்கென, 2,500 ரூபாய் வரை, ஒதுக்கீடு செய்தும், பணியாளர்கள் வர தயக்கம் காட்டுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் துாய்மைப் பணியாளர்களைக் கொண்டு, சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து, இரு துாய்மைப் பணியாளர்கள் மட்டுமே அனுப்பப்படுவர்.
இதேபோல, நகராட்சி, பேரூராட்சி நீங்கலாக கிராமப்புற பள்ளிகளுக்கு மட்டும் துாய்மைப் பணிக்கென, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக மாதம், 2,500 ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
இந்த தொகையைப்பெற்று, துாய்மைப் பணி மேற்கொள்ள எவரும் முனைப்பு காட்டுவதில்லை. பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்யும் பொறுப்பை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்திடம் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.